கிரியேட்டிவ் திறனை அதிகரித்து படைப்பாளர்களை ஊக்குவிக்க 15,000 பேருக்கு ஏஐ பயிற்சி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக கூகுள், யூடியூப் உடன் அரசு இணைந்து செயல்பட உள்ளது. மத்திய அரசு அறிவிப்பு இந்தியாவின் டிஜிட்டல் படைப்புத் துறையை உலகத் தரத்திற்கு உயர்த்த, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் ஒரு புதிய முன்னெடுப்பை அறிவித்துள்ளது. இதன்படி, முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள் மற்றும் யூடியூப் உடன் இணைந்து, இந்திய இளைஞர்கள் 15,000 பேருக்கு செயற்கை நுண்ணறிவு சார்ந்த சிறப்புப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. Indian Institute of Creative Technologies இதை முன்னெடுத்துள்ளது. தற்போதைய டிஜிட்டல் உலகில் மீடியா மற்றும் பொழுதுபோக்குத் துறைகளில் ஏஐ தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் தவிர்க்க முடியாததாகிவிட்டது. இதை கருத்தில் கொண்டு, இந்திய கன்டென்ட் கிரியேட்டர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் ஊடகத் துறையில் ஆர்வமுள்ளவர்களின் திறன்களை மேம்படுத்தவே இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. க்ரியேட்டிவ் வேலைகளில் ஏஐ பயன்பாடு இந்தப் பயிற்சியின் மூலம் வீடியோ உருவாக்கம், எடிட்டிங், ஆடியோ வடிவமைப்பு, புதிய சிந்தனைகளை உருவாக்குதல் மற்றும் அனிமேஷன் போன்ற படைப்பு சார்ந்த வேலைகளில் செயற்கை நுண்ணறிவை எப்படிச் சரியாகப் பயன்படுத்துவது என்பது கற்றுத்தரப்படும். இதன் மூலம் படைப்பாளிகள் தங்களது வேலை நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, படைப்புகளின் தரத்தையும் பல மடங்கு உயர்த்த முடியும். இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், "இந்தியா ஏற்கனவே யூடியூப் போன்ற தளங்களில் உலகளவில் மிகப்பெரிய படைப்பாளர் சமூகத்தைக் கொண்டுள்ளது. இந்தப் புதிய ஏஐ பயிற்சி நமது இளைஞர்களுக்கு நவீன தொழில்நுட்பக் கதவுகளைத் திறக்கும். அவர்கள் சர்வதேச அளவிலான படைப்பாளர்களுடன் போட்டியிடும் திறனைப் பெறுவார்கள்" எனத் தெரிவித்தனர். இணையப் பாதுகாப்பும் இதில் முக்கியம் படைப்பாளர்களின் தொழில்நுட்பத் திறனை வளர்ப்பது மட்டுமின்றி, இணையப் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை சார்ந்த விழிப்புணர்வும் இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும். மத்திய அரசின் இந்த ஏஐ கல்வி உதவித்தொகை திட்டம், இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்துவதோடு, எதிர்காலத்தில் படைப்பாற்றல் துறையில் புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

