வேலூர்: ராணிப்பேட்டை எல்லை சோதனைச்சாவடியில் அமைச்சர் துரைமுருகன் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்யாமல் அனுப்பிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.காட்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும், கட்சியின் பொதுச் செயலாளருமான அமைச்சர் துரைமுருகன், தனது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், காட்பாடி தொகுதிக்குட்பட்ட பொன்னை பகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய அவர், பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். பின்னர் வசூர், பள்ளேரி, லாலப்பேட்டை, அகராவரம், குமனந்தாங்கல், ஏகாமரனல்லூர், கத்தாரிகுப்பாம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். இதற்காக நேற்று மாலை ராணிப்பேட்டை மாவட்ட எல்லையான வசூர் சோதனைச்சாவடியை அவர் கடந்து செல்லும் போது, திமுக கொடியுடன் இருந்த அவரது கார் அங்கு நின்றது. அப்போது பணியில் இருந்த போலீசாரும், துணை ராணுவத்தினரும் காரில் இருந்த துரைமுருகனை பார்த்ததும் எந்தவித சோதனையும் செய்யாமல் அனுப்பி வைத்த வீடியோ வெளியாகியுள்ளது.அவருடன் அரக்கோணம் மக்களவை உறுப்பினர் ஜெகத்ரட்சகனும் பயணம் செய்ததாக தெரிகிறது. மேலும், அவருடன் சென்றதாக கூறப்படும் நான்கு வாகனங்களும் சோதனை இன்றி அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் காலத்தில் பணம், பரிசுப் பொருட்கள் விநியோகத்தை தடுக்க இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் சோதனைகளை மேற்கொண்டு வரும் நிலையில், முக்கிய அரசியல் தலைவரின் வாகனம் சோதனை செய்யப்படாதது குறித்து பொதுமக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கிடையில், அதன்பிறகு வந்த பிற கட்சி வாகனங்கள் அனைத்தும் வழக்கம்போல் சோதனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தச் செய்தி Etv Bharat ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

