மத்திய அரசின் தொகுதி மறுவரையறையை(Delimitation) எதிர்த்து, இன்று தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணி சார்பில் கருப்புக்கொடி போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அது என்ன என்பதை பார்க்கலாம். முதலமைச்சரின் பதிவு என்ன.? தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாமக்கல் திமுக நிர்வாகி இல்லத்தின் முன்பு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கருப்புக்கொடி ஏற்றியும், தொகுதி மறுவரையறை திட்ட நகலை எரித்தும் போராட்டம் நடத்தினார். இதனிடையே, தனது எக்ஸ் தளத்தில், தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் தீ பரவட்டும், பாஜகவின் ஆணவம் அழியட்டும் எனக் கூறி, ஒரு முக்கியமான பதிவை போட்டுள்ளார். #Delimitation : தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் #தீ_பரவட்டும் ! பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்! 🔥 அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது! 🔥 இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும்... pic.twitter.com/aSsOLN7K6J — M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) April 16, 2026 முன்னதாக, தொகுதி மறுவரையறை என்ற பெயரில், தங்களது வரம்பை தாண்டி, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை பாஜக அரசு வஞ்சிப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மேலும், இப்போது கொண்டுவரும் சட்டத் திருத்தத்தால், பெயரளவிற்கு தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு தொகுதியை அதிகரிக்கிறோம் என்று சொல்லிவிட்டு, அவர்களுக்கு சாதகமான வட மாநிலங்களுக்கு மிகவும் கூடுதலாக தொகுதிகளை அதிகரிக்கிறார்கள் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார். “கருப்புக்கொடி போராட்டம்“ அதைத் தொடர்ந்து, தொகுதி மறுவரையறையை எதிர்த்து, தமிழ்நாடு முழுவதும் இன்று கருப்புக் கொடி போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தார். அதன்படி, நாமக்கல் மாவட்டம் நல்லிப்பாளையத்தில் உள்ள திமுக நிர்வாகியின் இல்லத்தின் முன்பு கருப்புகொடி ஏற்றியும், தொகுதி மறுவரையறை திட்ட நகலை எரிர்த்தும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போராட்டம் நடத்தினார். அப்போது, மாநிலங்களின் உரிமைகளை பறிக்கக் கூடாது என முதலமைச்சர் மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கோஷமிட்டனர். இன்று நாடாளுமன்ற கூட்டம் இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் தொடங்கி வரும் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதில், அரசியலமைப்பு சட்டம் 131-வது திருத்த மசோதா 2026, தொகுதிகள் மறுவரையறை மசோதா 2026 மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டங்கள் திருத்த மசோதா 2026 ஆகிய மூன்று மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


