மீண்டும் சீட் வழங்கப்படும் என எதிர்பார்ப்பு சென்னை எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ள பரந்தாமன் உதயநிதி ஆதரவாளராக வலம் வந்தார். இவர் தொகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மட்டுமின்றி, இலவச சட்ட உதவிகளையும் செய்து வந்தார். இதனால், மக்களிடம் அவருக்கு தனி செல்வாக்கு இருந்தது. எனவே இத்தொகுதியில் போட்டியிட, கட்சி தலைமை மீண்டும் வாய்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தமிழன் பிரசன்னா - விற்கு சீட் தி.மு.க., பேச்சாளரும் , வழக்கறிஞருமான தமிழன் பிரசன்னாவிற்கு எழும்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால், பரந்தாமன் மட்டுமின்றி, அவரது ஆதரவாளர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். தொகுதி மக்களிடம் நல்ல பெயர் எடுத்தாலும், அமைச்சர் சேகர்பாபுவை பகைத்து கொண்டது தான் பரந்தாமனுக்கு 'சீட்' கிடைக்காததற்கான காரணம் என தெரிய வந்துள்ளது. வெளியில் வராமல் இருப்பது நல்லது பரந்தாமனுக்கு சீட் தராதது குறித்து, தி.மு.க., தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதை பரந்தாமன், தன் ஆதரவாளர்கள் வாயிலாக உருவாக்கி வெளியிட்டுள்ளதாக தி.மு.க., தலைமை கருதுகிறது. அவர் பிரசாரம் செய்ய வேட்பாளருடன் சென்றால், அவர் மீதுள்ள அபிமானத்தால், பொதுமக்களிடம் கட்சிக்கு அதிருப்தி அதிகரிக்கும். தேர்தல் முடியும் வரை, வெளியில் வராமல் இருப்பது நல்லது. அவர் உள்ளடி வேலை செய்தால் அ.தி.மு.க., வேட்பாளருக்கு சாதகமாகிவிடும் என அமைச்சர் சேகர்பாபு தரப்பில் முதல்வரிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. சென்னை பக்கம் வரக் கூடாது இதையடுத்து, மேட்டூர், சங்ககிரி, இடைப்பாடி தொகுதிகளின் பொறுப்பாளர் பணி பரந்தாமனுக்கு வழங்கப்பட்டு உள்ளது. ஒரு தொகுதியை வழங்கினால், அவ்வப்போது சென்னை வந்து விடுவார் என்பதால், மூன்று தொகுதிகளின் பொறுப்பாளராக பரந்தாமன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சட்டசபை தேர்தல் முடியும் வரை சென்னை பக்கம் தலைகாட்டக் கூடாது எனவும், அவருக்கு கட்சி தலைமை உத்தரவிட்டு உள்ளது. இதனால் பரந்தாமன் அதிருப்தி அடைந்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


