மத்திய கிழக்கு போரின் முக்கிய கட்டமாக, இரு தரப்பும் பயங்கர மிரட்டல்களை விடுத்துவரும் நிலையில், நேற்று அது உச்ச கட்டத்தை எட்டியது. அதைத் தொடர்ந்து, ஈரானின் மிகப்பெரிய பாலம் தாக்குதலில் இடிந்து விழும் வீடியோவை வெளியிட்டுள்ள ட்ரம்ப், இன்னும் கூட தாமதமாகவில்லை, உடனடியாக ஒப்பந்தத்திற்கு வாருங்கள் என்று ஈரானுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனிடையே, துபாயில் உள்ள மிக முக்கியமான இடங்களை ஈரான் தாக்கியுள்ளது. என்ன நடக்கிறது.? இப்போது பார்க்கலாம். வீடியோ வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ள ட்ரம்ப் நேற்று அமெரிக்க மக்களிடையே உரையாற்றியபோது, ஈரானுக்கு கடும் மிரட்டல்களை விடுத்திருந்தார் ட்ரம்ப். அதாவது, அடுத்த 2, 3 வாரங்கள் தாக்குதல் மிகக் கடுமையாக இருக்கும், அவர்கள் கற்கால யுகத்திற்கே செல்வார்கள் என்று அவர் கூறியிருந்தார். அமெரிக்காவின் முக்கியமான இலக்குகள் நிறைவேறும் நிலையில் உள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் மிக விரைவில் முடியும் என்று அவர் கூறிய நிலையில், ஈரானின் மிகப் பெரிய பாலம் நேற்று தாக்கி அழிக்கப்படும் வீடியோவை அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ட்ரம்ப். அந்த பதிவில், “மீண்டும் பயன்படுத்த முடியாத வகையில் ஈரனின் மிகப் பெரிய பாலம் இடிந்து விழுகிறது. இதேபோல் இன்னும் நிறைய தொடரும். காலம் கடந்து, ஒரு மாபெரும் நாடாக உருவெடுப்பதற்கு இனி எதுவும் மிச்சமில்லை என்ற நிலைக்கு தள்ளப்படுவதற்கு முன், ஒரு ஒப்பந்தத்தை ஈரான் மேற்கொள்ள வேண்டிய நேரம் இது.“ என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். துபாய் விமான நிலையத்தை தாக்கிய ஈரான் இதனிடையே, ஈரானின் ஏவுகணை தாக்குதலில் துபாய் விமான நிலையம் மற்றும் புகழ்பெற்ற புர்ஜ் அல் அரப் ஹோட்டல் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன. அமெரிக்க இஸ்ரேல் கூட்டுப்படைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அவர்களுக்கு ராணுவ தளங்களை கொடுத்து உதவும் அண்டை நாடுகளான அரபு நாடுகள் மீது ஈரான் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், நேற்று இரு தரப்பும் பயங்கர மிரட்டல்களை விடுத்த நிலையில், ஈரனின் மிகப் பெரிய பாலத்தை கூட்டுப்படைகள் தாக்கி அழித்துள்ளன. அதே நேரத்தில், உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாக விளங்கும் துபாய் விமான நிலையத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில், விமான நிலையத்தின் ஒரு முனையம் சேதமடைந்துள்ளதாக துபாய் ஊடகப் பிரிவு அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல், அபுதாபியில் உள்ள சையத் சர்வதேச விமான நிலையத்தை தாக்க வந்த ஏவுகணை இடைமறித்து அழிக்கப்பட்டபோது, அதன் எஞ்சிய பாகங்கள் விழுந்து, ஜெபல் அலி துறைமுகத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, ஜுமேரோ கடற்கரைக்கு அருகே உள்ள ஒரு செயற்கை தீவில் அமைந்திருக்கும், துபாயின் முக்கிய அடையாளமாக கிழும் புர்ஜ் அல் அரப் ஹோட்டலும், ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, ஈரானின் தாக்குதல் காரணமாக, துபாய் மற்றும் அபுதாபி உட்பட அந்த பிராந்தியம் முழுவதும், ஐக்கிய அரபு அமீரக விமான நிறுவனங்கள் விமான சேவைகளை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



