நீட் தேர்வுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில், தேர்வில் எதிர்மறை மதிப்பெண்களின் தாக்கம் என்ன? டை பிரேக்கிங் விதிகள் என்ன? உள்ளிட்ட முக்கிய தகவல்களை இப்போது பார்ப்போம். 12 ஆம் வகுப்புக்குப் பிறகு எம்.பி.பி.எஸ் படித்து டாக்டராவது பலரின் கனவு. அதேநேரம் எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வில் (NEET UG 2026) தகுதி பெற வேண்டும். இந்த நீட் தேர்வு எம்.பி.பி.எஸ் (MBBS) மட்டுமல்லாது பி.டி.எஸ் (BDS), ஆயுர்வேதம் (BAMS), யுனானி (BUMS), ஹோமியோபதி (BHMS) மற்றும் சித்தா (BSMS) போன்ற இளங்கலை மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய படிப்புகளில் சேருவதற்கான ஒரே நுழைவுத் தேர்வாக ஆகும். இந்த நீட் தேர்வை 12 ஆம் வகுப்பு முடித்த லட்சக்கணக்கான மாணவர்கள் ஆண்டுதோறும் எழுதி வருகின்றனர். இந்த ஆண்டு நீட் தேர்வு மே 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தநிலையில், நீட் தேர்வில் எதிர்மறை மதிப்பெண்களின் தாக்கம் என்ன? டை பிரேக்கிங் விதிகள் என்ன? உள்ளிட்ட முக்கிய தகவல்களை கல்வி ஆலோசகர் செந்தில் நாதன் தனது பயாலஜி சிம்பிளிஃபைடு தமிழ் என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் விளக்கியுள்ளார். நீட் தேர்வில் உயிரியலில் 90 கேள்விகளும், இயற்பியல் மற்றும் வேதியியலில் தலா 45 கேள்விகளும் கேட்கப்படும். சரியான வினாவுக்கு 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். பதிலளிக்கப்படாத கேள்விகளுக்கு மதிப்பெண் கிடையாது. தவறான வினாவுக்கு ஒரு மதிப்பெண் கழிக்கப்படும். எனவே தெரியாத கேள்விகளுக்கு பதில் அளித்து, தவறானால் நீங்கள் எடுத்த மதிப்பெண்களில் இருந்து கழிக்கப்படும். இதனால் கவனமாக விடையளிக்க வேண்டும். ஒரே மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு டைபிரேக்கிங் விதிகள் அடிப்படையில் அடுத்தடுத்த தரவரிசை வழங்கப்படும். டைபிரேக்கிங் விதிகள் உயிரியலில் (தாவரவியல் & விலங்கியல்) அதிக மதிப்பெண்கள்/சதவீத மதிப்பெண்களைப் பெறுபவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வேதியியலில் அதிக மதிப்பெண்கள்/சதவீத மதிப்பெண்களைப் பெறுபவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இயற்பியலில் அதிக மதிப்பெண்கள்/சதவீத மதிப்பெண்களைப் பெறுபவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அனைத்து பாடங்களிலும் குறைவான தவறான பதில்கள் அளித்த மாணவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். உயிரியலில் (தாவரவியல் & விலங்கியல்) குறைவான தவறான பதில்கள் அளித்த மாணவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வேதியியலில் குறைவான தவறான பதில்கள் அளித்த மாணவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இயற்பியலில் குறைவான தவறான பதில்கள் அளித்த மாணவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேற்கூறிய அனைத்திலும் ஒரே மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு ரேண்டம் முறை அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும்.
இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



