10 அணிகள் களமாடும் 19-வது ஐ.பி.எல். தொடர் கடந்த 28-ம் தேதி முதல் கோலாகலாமாக தொடங்கியது. வருகிற மே 31-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறும் இந்தத் தொடரின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், மார்ச் 28 அன்று பெங்களூரில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, தொடர் போன் திருட்டுகளில் ஈடுபட்டதாக, சிறார்கள் உட்பட நான்கு குற்றவாளிகளை கப்பன் பார்க் போலீசார் கைது செய்துள்ளனர். பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த, சுமார் ரூ. 18 லட்சம் மதிப்புள்ள 21 போன்கள் (அலைபேசிகள்) குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், போட்டி நடைபெற்ற சமயத்தில், எம்.ஜி. சாலை மற்றும் கப்பன் பார்க் மெட்ரோ ரயில் நிலையம் ஆகிய பகுதிகளைச் சுற்றி இந்தத் திருட்டுச் சம்பவங்கள் பதிவாகின என்றும் போலீசார் கூறியிருக்கிறார்கள். மேலும், இதுவரை 29 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன; நகரத்தின் பிற பகுதிகளிலும், ஏன் பிற மாநிலங்களில் நடைபெற்ற போட்டிகளின்போதும் இதேபோன்ற திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. முக்கிய நிகழ்வுகளின்போது கூடும் கூட்டத்தை இலக்காகக் கொண்டு செயல்படும் ஒரு பெரிய குற்றக் கும்பலின் அங்கமாக இந்தக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் உள்ளனரா என்பது குறித்துக் போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும் தகவல்களைச் சேகரிக்கவும், இது போன்ற குற்றங்களில் தொடர்புடைய பிற சந்தேக நபர்களைக் கைது செய்யவும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


