நாம் அன்றாடம் பயன்படுத்தும் சாட்ஜிபிடி, ஜெமினி ஏ.ஐ முதல் அதிநவீன ஏ.ஐ கருவிகள் வரை அனைத்தையும் இயக்குவது 'டேட்டா சென்டர்கள்' எனப்படும் பிரம்மாண்ட தரவு மையங்கள். பல ஆயிரம் சர்வர்களை கொண்ட இந்த ராட்சத கட்டிடங்கள், வெறும் மின்சாரத்தை மட்டும் விழுங்குவதில்லை; இப்போது பூமியின் வெப்பநிலையையும் உயர்த்தி வருவது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆராய்ச்சியாளர்கள் கடந்த 20 ஆண்டுகால தரவுகளை அலசியபோது ஒரு அதிர்ச்சி உண்மை பிடிபட்டது. ஒரு டேட்டா சென்டர் தன் பணியைத் தொடங்கிய சில காலத்திலேயே, அதைச் சுற்றியுள்ள நிலப்பரப்பின் வெப்பநிலை சராசரியாக 2 டிகிரி செல்சியஸ் உயருகிறது. இது கேட்பதற்கு சிறிய மாற்றமாகத் தோன்றலாம். ஆனால், ஒரு இதமான குளிர்கால காலைப் பொழுதும், மே மாதத்தின் சுட்டெரிக்கும் மதிய நேரமும் சந்திக்கும் வெப்ப வேறுபாடு இதுதான். இந்த வெப்ப பாதிப்பு அந்தத் தரவு மையத்தோடு முடிந்து விடுவதில்லை. அங்கிருந்து சுமார் 10 கி.மீ தூரம் வரை ஒரு 'வெப்பக் குமிழியை' இது உருவாக்குகிறது. அதாவது, நகரின் ஒரு பகுதியில் இருக்கும் டேட்டா சென்டர், பல கிலோமீட்டர் தள்ளியிருக்கும் உங்க வீட்டு வெப்பநிலையை அதிகரிக்கக்கூடும். இதனை நிபுணர்கள் வெப்பத் தீவுகள் என்றழைக்கிறார்கள். கட்டிடங்கள் மற்றும் சாலைகள் இந்த வெப்பத்தை உறிஞ்சி வைத்துக்கொள்வதால், பசுமை நிறைந்த கிராமப்புறங்களை விட நகரங்கள் தகிக்கும் தணலாக மாறுகின்றன. மெக்ஸிகோ முதல் ஸ்பெயின் வரை பெரிய டேட்டா சென்டர்கள் அமைந்துள்ள பகுதிகளில், காரணமே இல்லாமல் வெப்பநிலை 2°C உயர்ந்துள்ளது பதிவாகியுள்ளது. உலகளவில் சுமார் 34 கோடி மக்கள் செயற்கையான வெப்ப உயர்வால் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர். தற்போது மும்பை, சென்னை, ஹைதராபாத் போன்ற பெருநகரங்களில் இந்தியா தனது தரவு மையங்களை மின்னல் வேகத்தில் விரிவுபடுத்தி வருகிறது. ஏற்கனவே கடும் கோடை வெப்பத்தைச் சந்தித்து வரும் நிலையில், இந்த ஏஐ-வெப்பமும் சேர்ந்துகொண்டால் மக்களின் ஆரோக்கியத்திற்கும், பொருளாதாரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்று எச்சரிக்கப்படுகிறது. ஏ.ஐ என்னும் தங்கத்தை நோக்கிய ஓட்டத்தில் நாம் சுற்றுச்சூழலை மறந்துவிட்டோம். முறையான திட்டமிடல் இல்லாமல் இந்த வளர்ச்சி தொடர்ந்தால், சமூகம் மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



