விண்வெளியில் பறக்கும் தட்டுகள் மர்மமான முறையில் நகர்வதைப் பார்த்திருப்போம். ஆனால், அதே போன்ற தந்திரத்தைப் பயன்படுத்தி கடலுக்கடியில் ஒரு மீன் வேட்டையாடுவதைக் கண்டறிந்து விஞ்ஞானிகள் மிரண்டு போயுள்ளனர். 'பிராட்கிளப் கட்ஃபிஷ்' (Broadclub Cuttlefish) எனும் இந்த கனவாய் மீன், ஒளிரும் விண்கலம் போல உருமாறி நண்டுகளை வேட்டையாடும் ரகசியம் இப்போது உடைக்கப்பட்டுள்ளது. பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்தோனேசியாவின் பவளப்பாறைகளில் அதிவேக கேமராக்கள் மூலம் இந்த மீனின் வேட்டையை படம்பிடித்தனர். வேட்டையாடும் அந்த நொடியில், இந்த மீன் செய்யும் மாற்றங்கள் அதிரடியானவை. முதலில் உடல் முழுவதையும் பேய் போன்ற வெளிறிய நிறத்திற்கு மாற்றுகிறது. தனது தலை மற்றும் கைகள் வழியாக அடர் நிறக் கோடுகளை மின்னல் வேகத்தில் கீழ் நோக்கி ஓடச் செய்கிறது. தனது ஆறு கைகளையும் ஒரு கூம்பு போல முன்னோக்கி நீட்டிக்கொண்டு, நொடிக்கு 2.2 முறை உடல் முழுவதையும் அதிரச் செய்கிறது. பார்ப்பதற்கு இது ஒரு ஏலியன் விண்கலம் கடலுக்கு அடியில் மெதுவாக மிதந்து வருவது போலவே இருக்கும். நண்டுகள் பொதுவாகத் தன்னை நோக்கி விரிந்து வரும் உருவங்களைக் கண்டால் 'ஆபத்து' என உணர்ந்து ஓடிவிடும். ஆனால், இந்த மீன் தன் உடலில் உருவாக்கும் அந்த அலை அலையான கோடுகள் நண்டின் மூளைக்கு மிகப்பெரிய 'பார்வைக் குழப்பத்தை' (Visual Noise) ஏற்படுத்துகின்றன. ஆய்வக சோதனையில், சாதாரண உருவங்களைக் கண்டு பயந்து ஓடிய நண்டுகள், இந்த மீனின் 'யுஎஃப்ஓ' வேடத்தைக் கண்டு 4 மடங்கு குறைவாகவே எதிர்வினை ஆற்றின. அதாவது, நண்டின் கண்களுக்குத் தன்னை நோக்கி ஒரு எமன் வருவது தெரியாமல், அந்த இடமே காலியாக இருப்பது போன்ற மாயையை இந்த மீன் உருவாக்குகிறது. இந்த விசித்திரமான மீன்கள் இந்தோனேசியாவில் மட்டுமல்ல, நமது இந்தியக் கடல் பகுதிகளிலும் வாழ்கின்றன. லட்சத் தீவு, அந்தமான், மன்னார் வளைகுடா, இந்தியக் கடல்சார் உயிரியலாளர்கள் இப்போது நமது நாட்டுப் பகுதிகளில் உள்ள கனவாய் மீன்களும் இதே போன்ற விசித்திரமான 'யுஎஃப்ஓ' தந்திரத்தைப் பயன்படுத்துகின்றனவா என்று ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர். இந்த மீனின் அசாத்தியமான உருமாற்றத் திறன், எதிர்காலத்தில் எதிரிகளின் கண்ணில் படாமல் பறக்கும் 'ஸ்டெல்த் ட்ரோன்கள்' (Stealth Drones) மற்றும் மாயமறைப்பு தொழில்நுட்பங்களை (Optical Camouflage) மேம்படுத்த உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இந்த பிராட்கிளப் கனவாய் மீன் தன்னை ஒரு பயங்கரமான விலங்காகக் காட்டிக்கொள்ள விரும்புவதில்லை; மாறாக, தான் அங்கேயே இல்லை என்பது போன்ற ஒரு மாயையை உருவாக்கி மிகவும் கச்சிதமாக வேட்டையாடுகிறது. இயற்கையின் படைப்பில் இது நிஜமான 'மறைந்திருந்து தாக்கும்' வித்தை.
இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


