ஏப்ரல் 2-ம் தேதி நாசாவின் ஆர்டெமிஸ் 2 (Artemis 2) விண்கலம் நிலவை நோக்கிப் பாய்ந்தபோது, நான்கு விண்வெளி வீரர்களுக்கான உணவுப் பட்டியலில் 189 பொருட்கள் இடம்பெற்றிருந்தன. அதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், 58 டொர்டிலாக்கள் மற்றும் 43 கப் காபியுடன் 5 விதமான ஹாட் சாஸ் பாட்டில்களும் அனுப்பப்பட்டுள்ளன. இது வெறும் சுவைக்காகவோ அல்லது வீரர்களின் விருப்பத்திற்காகவோ செய்யப்பட்ட காரியம் அல்ல; மாறாக 60 ஆண்டுகால விண்வெளிப் பயணங்களில் தீர்க்க முடியாத ஒரு உயிரியல் சிக்கலைச் சமாளிக்க நாசா கையாண்டுள்ள ஒரு தந்திரமாகும். விண்வெளியில் உடலுக்கு என்ன நடக்கும்? விண்வெளிக்குச் சென்ற சில மணிநேரங்களிலேயே மனித உடல் ஈர்ப்பு விசை இல்லாத சூழலுக்குப் பழக முடியாமல் திணறத் தொடங்குகிறது. பூமியில் ஈர்ப்பு விசை நமது ரத்தம் மற்றும் உடல் திரவங்களைக் கீழ்நோக்கி இழுத்து வைத்திருக்கும். ஆனால் விண்வெளியில் (Microgravity) இந்த விசை இல்லாததால், கால்களில் இருக்க வேண்டிய திரவங்கள் மார்பு மற்றும் தலைப்பகுதியை நோக்கி நகரத் தொடங்குகின்றன. இதற்கு மருத்துவ ரீதியாக 'செபாலிக் ப்ளூயிட் ஷிப்ட்' (Cephalad fluid shift) என்று பெயர். இதனால் விண்வெளி வீரர்களின் முகம் வீங்கியது போலத் தோன்றும், நாசிப்பாதைகள் அடைத்துக்கொள்ளும். பார்ப்பதற்கு கடுமையான ஜலதோஷம் பிடித்தது போல இருக்கும், ஆனால் அங்கே வைரஸோ தொற்றோ கிடையாது. இது புவிஈர்ப்பு விசை இல்லாததால் ஏற்படும் மாற்றம். இதையே 'விண்வெளி சளி' (Space Cold) என்கிறார்கள். சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றிய 75 சதவீத வீரர்கள் இந்த மூக்கடைப்பு புகாரைத் தெரிவித்துள்ளனர். சுவை ஏன் மறைந்து போகிறது? நாம் சுவையை உணர்வது நாக்கினால் என்று நினைக்கிறோம், ஆனால் அது தவறு. இனிப்பு, புளிப்பு, கசப்பு, உப்பு மற்றும் உமாமி ஆகிய 5 அடிப்படை சிக்னல்களை மட்டுமே நாக்கு அறியும். ஒரு உணவின் உண்மையான மணம் மற்றும் சுவையை 80 சதவீதம் தீர்மானிப்பது நமது மூக்குதான். நாம் உணவை மெல்லும்போது, அதன் வாசனை மூக்கின் உட்புறம் வழியாகச் சென்று மூளைக்குத் தகவல் அனுப்பும். ஆனால் விண்வெளி வீரர்களுக்கு மூக்கடைப்பு இருப்பதால், அவர்களால் உணவின் மணத்தை உணர முடிவதில்லை. இதனால் எவ்வளவு சுவையான உணவாக இருந்தாலும், அவர்களுக்கு அது 'கார்ட்போர்டு' (அட்டைப்பெட்டி) மெல்லுவது போன்ற உணர்வையே தரும். மேலும், விண்வெளிக்கு அனுப்பப்படும் உணவுகள் நீண்ட நாள் கெட்டுப்போகாமல் இருக்க அதிக வெப்பத்திலோ அல்லது கதிர்வீச்சுக்கோ உட்படுத்தப்படுவதால், அவற்றின் இயற்கை மணமும் ஏற்கனவே குறைந்திருக்கும். ஹாட் சாஸின் ரகசியம் இங்குதான் ஹாட் சாஸ் முக்கியப் பங்கு வகிக்கிறது. மிளகாயில் உள்ள 'கேப்சைசின்' (Capsaicin) என்ற காரமான வேதிப்பொருள், மற்ற வாசனைப் பொருட்களைப் போல மூக்கின் வழியே செயல்படுவதில்லை. அது நேரடியாக 'ட்ரைஜெமினல்' (Trigeminal nerve) என்ற நரம்பு மண்டலத்தைத் தூண்டி, வெப்பம் மற்றும் வலியை மூளைக்கு உணர்த்துகிறது. மூக்கடைப்பு இருந்தாலும் காரம் மட்டும் வீரர்களுக்குத் தெளிவாகத் தெரியும். உணவு ருசியற்றுப் போகும்போது, வீரர்கள் சரியாகச் சாப்பிட மாட்டார்கள். இதனால் அவர்கள் உடல் எடை குறைந்து, நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்பட்டு, மூளையின் செயல்திறன் குறைய வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்கவே, மூக்கைத் தவிர்த்து நேரடியாக மூளைக்குச் சுவையை உணர்த்தும் இந்த 'காரமான மிஷனை' நாசா திட்டமிட்டுள்ளது. ஆர்டெமிஸ் 2 விண்கலத்தில் உள்ள அந்த 5 பாட்டில்கள் வெறும் ஆடம்பரப் பொருட்கள் அல்ல; அவை விண்வெளி வீரர்கள் சோர்வடையாமல் ஆரோக்கியமாக நிலவுக்குச் சென்று திரும்ப உதவும் மிக முக்கியமான 'உயிரியல் கருவிகள்'.
இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


