இது ஏதோ திரைப்படத்தின் காட்சியோ அல்லது மொபைல் போன் 'ஃபில்டர்'களோ அல்ல; நிஜமாகவே நடந்த ஒரு அறிவியல் அதிசயம். மேற்கு ஆஸ்திரேலியாவின் வானம் திடீரென அடர் சிவப்பு நிறத்திற்கு மாறிய வீடியோ இணையதளங்களில் தீயாய் பரவி உலகையே அதிர வைத்து உள்ளது. நடந்தது என்ன? விரிவாகப் பார்க்கலாம். மேற்கு ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் பகல் வெளிச்சம் மறைந்து, ஒட்டுமொத்த வான்பரப்பும் ரத்தச் சிவப்பாக மாறியது. கட்டிடங்கள், சாலைகள் மற்றும் சுற்றியுள்ள காற்று என அனைத்தும் சிவப்பு நிறத்தில் காட்சியளித்ததால், அந்த இடமே ஒரு மாயலோகம் போலவும், ஏதோ ஒரு பேரழிவு (Apocalypse) நெருங்குவது போன்றும் மர்மமாகத் தென்பட்டது. சிவப்பு வானம் ஆபத்தானதா? பொதுவாக சிவப்பு நிற வானம் ஆபத்தானது அல்ல. ஆனால், இது காற்றின் தரம் மிகவும் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. காற்றில் அதிகப்படியான தூசு படிந்திருப்பதால் பார்வைத் திறன் (Visibility) குறையும், இது பயணங்களைப் பாதிக்கலாம். மேலும், இது மோசமான வானிலை வரப்போவதற்கான ஒரு முன்னெச்சரிக்கை அறிகுறியாகும். NO, that's not a filter! ☁️🔴 The sky turned an eerie shade of red in Western Australia as dust filled the air ahead of Tropical Cyclone Narelle. pic.twitter.com/dCQ2hjFluI — AccuWeather (@accuweather) March 28, 2026 வானம் சிவப்பாக மாறியதற்குப் பின்னால் ஒரு எளிய அறிவியல் உண்மை உள்ளது. சூரிய ஒளியானது பல்வேறு வண்ண அலைநீளங்களைக் கொண்டது. வளிமண்டலத்தில் உள்ள தூசு துகள்கள், நீல நிறம் போன்ற குறைந்த அலைநீளம் கொண்ட வண்ணங்களைச் சிதறடித்து விட்டு, சிவப்பு மற்றும் ஆரஞ்சு போன்ற நீண்ட அலைநீளம் கொண்ட வண்ணங்களை மட்டும் ஊடுருவ அனுமதிக்கின்றன. காற்றில் தூசு அதிகரிக்க அதிகரிக்க, வானத்தின் சிவப்பு நிறம் இன்னும் அடர்த்தியாகத் தெரியும். 'நரேல்' என்ற சக்திவாய்ந்த புயலும், மணல் புயலும் ஒன்றிணைந்ததே இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம். ஆஸ்திரேலியாவின் வறண்ட நிலப்பகுதியில் உள்ள இரும்புச்சத்து நிறைந்த சிவப்பு மண்ணை பலத்த காற்று வாரிச் சுருட்டி வளிமண்டலத்தில் ஏவியது. இந்தத் துகள்கள் சூரிய ஒளியை வடிகட்டியதால் வானம் ரத்தச் சிவப்பாகக் காட்சியளித்தது. இந்த வீடியோ வைரலானதும், பலரும் இது 'உலக அழிவின் அறிகுறி' என்றும், 'கடவுளின் கோபம்' என்றும் கருத்து தெரிவித்தனர். இன்னும் சிலர் பருவநிலை மாற்றத்தின் விளைவு இது எனக் கூறினர். ஆனால், விஞ்ஞானிகள் இது ஒரு இயற்கையான வானிலை நிகழ்வுதான் என்று தெளிவுபடுத்தினர். இது அரிதான நிகழ்வா? ஆஸ்திரேலியா போன்ற வறண்ட மற்றும் இரும்புச்சத்து நிறைந்த மண் கொண்ட பகுதிகளில் மணல் புயல்கள் சாதாரணமானவைதான். ஆனால், இந்த வீடியோவில் காணப்பட்டதைப் போன்ற அடர்த்தியான சிவப்பு நிறம் மிகவும் அரிதானது. அதன் தீவிரத் தன்மை காரணமாகவே இது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



