மயிலாடுதுறை: மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்புக்கு எதிராக அக்கட்சியின் மாவட்ட துணைத்தலைவரே போர்க்கொடி தூக்கியுள்ள சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "இந்த வேட்பாளருக்கு இஸ்லாமிய சமுதாயம் ஆதரவு அளிக்காது" என்று பகிரங்கமாகத் தெரிவித்துள்ள அவர், பிரதமர் மோடியின் ஆட்சி சிறப்பாக உள்ளதாகப் பாராட்டியிருப்பது காங்கிரஸ் மேலிடத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வாரிசு அரசியல் புறக்கணிப்பா? பசுருதீன் காட்டம் மயிலாடுதுறையில் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் எம்.எம்.எஸ். பசுருதீன், கட்சித் தலைமை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் கூறியதாவது, "மயிலாடுதுறை தொகுதியில் எனது தந்தை எம்.எம்.எஸ். அபுல்ஹாசன் 1991 மற்றும் 1996 ஆகிய ஆண்டுகளில் போட்டியிட்டு இமாலய வெற்றி பெற்றவர். இந்த மண்ணில் இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற எண்ணம் கட்சிக்கு இருந்திருந்தால், பாரம்பரியமிக்க எங்களைப் போன்றவர்களுக்குத் தான் வாய்ப்பு அளித்திருக்க வேண்டும். அதை விடுத்து, விருப்பமனுவே அளிக்காத ஒருவரை வேட்பாளர் பட்டியலில் சேர்த்து வாய்ப்பு கொடுத்திருப்பது ஜனநாயக படுகொலை." வெளிமாவட்ட வேட்பாளர் திணிப்பு: எம்பி சுதா மீது சாடல் தற்போதைய மயிலாடுதுறை எம்பி ஆர். சுதா, தொகுதிக்குச் சம்பந்தமில்லாத நபர்களைத் திணிப்பதாக பசுருதீன் குற்றம் சாட்டினர். அறிமுகமில்லாத வேட்பாளர்: "ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த ஒருவரை இங்கு வேட்பாளராக எம்பி பரிந்துரைத்துள்ளார். மயிலாடுதுறை எம்பி சுதாவையே இன்னும் பலருக்கு அடையாளம் தெரியாது. இதில் அவர் மற்றொரு வெளிமாவட்டக்காரரை இங்கு கொண்டு வருவது வேடிக்கையாக உள்ளது." தகுதி என்ன? "ராகுல் காந்தியின் நடைபயணத்தில் இரண்டு நாள் பங்கேற்றார் என்பதற்காக எம்பி சுதாவுக்குத் தலைமை முக்கியத்துவம் தருகிறது. அவர் என்ன தண்டி யாத்திரையா சென்றார்? தகுதியற்றவர்களுக்கு முக்கியத்துவம் தருவதால் காங்கிரஸ் கட்சி தரம் தாழ்ந்து கேடுகெட்ட நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. "இஸ்லாமிய சமுதாயம் ஆதரவு தராது" வேட்பாளர் தேர்வில் சிறுபான்மையினர் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், "மயிலாடுதுறையில் இஸ்லாமிய சமுதாயம் இந்த வேட்பாளருக்கு ஆதரவாக இருக்காது. மண்ணின் மைந்தர் அல்லாத ஒருவருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தோல்வியடைவது உறுதி," என எச்சரித்தார். மோடி அரசுக்கு பாராட்டு- காங்கிரஸில் அதிர்ச்சி பேட்டியின் இறுதியில் பசுருதீன் தெரிவித்த கருத்துக்கள் தான் காங்கிரஸாரை உறைய வைத்துள்ளது. காங்கிரஸ் பதவியில் இருந்துகொண்டே பிரதமர் மோடியின் செயல்பாடுகளை அவர் வெகுவாகப் பாராட்டினார். "பிரதமர் மோடி அரசின் மீது இங்கு எந்த எதிர்ப்பும் இல்லை. அவர் செய்யும் திட்டங்கள் மக்கள் மத்தியில் சிறப்பாகச் சென்றடைந்துள்ளது. இன்று நாடு பொருளாதார வளர்ச்சியில் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்றால் அதற்கு மோடி தான் காரணம். இனிவரும் காலங்களில் யாரோ ஒருவரை வேட்பாளராக நிறுத்தினால் காங்கிரஸ் ஜெயித்துவிடும் என்ற மாயை பலிக்காது," என்று அவர் அதிரடியாகத் தெரிவித்தார். பின்னடைவில் காங்கிரஸ்? ஏற்கனவே வேட்பாளர் தேர்வுக்கு எதிராகப் போஸ்டர் யுத்தம் நடந்து வரும் நிலையில், கட்சியின் மாவட்ட துணைத்தலைவரே பிரதமர் மோடியைப் புகழ்ந்து பேசி, வேட்பாளருக்கு எதிராகத் திரும்பியிருப்பது காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. இவர் மீது கட்சித் தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமா அல்லது இந்த அதிருப்தி வாக்குகளாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அவர் என்ன தண்டி யாத்திரையா சென்றார்? - காங்கிரஸ் எம்பியை கடுமையாக விமர்சித்த உடன்பிறப்பு...!

