மயிலாடுதுறை: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்ட அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீர்காழி தொகுதியின் வேட்பாளர் அறிவிப்பில் அதிருப்தி அடைந்த முன்னாள் சீர்காழி சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட அவைத் தலைவருமான பி.வி.பாரதி, தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். மேலும் மாவட்டத் தலைமையின் மீது அவர் சுமத்தியுள்ள கடுமையான புகார்கள் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. வேட்பாளர் அறிவிப்பும் அதிருப்தியும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டது முதல், பல்வேறு மாவட்டங்களில் சலசலப்புகள் எழுந்து வருகின்றன. அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி (தனி) தொகுதிக்கான வேட்பாளர் தேர்வில் முறையான அணுகுமுறை பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நீண்ட காலமாகத் தொகுதியில் செல்வாக்குடன் விளங்கிய பி.வி.பாரதிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தலைமை சீர்காழி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சக்தி வேட்பாளராக அறிவித்தது பாரதி மற்றும் அவரது ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பொதுச்செயலாளருக்கு உருக்கமான கடிதம் தனது ராஜினாமா குறித்து அதிமுக பொதுச்செயலாளருக்கு பி.வி.பாரதி அனுப்பியுள்ள கடிதத்தில் தனது குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: "வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் அறிவிப்பில், சீர்காழி தொகுதிக்கான வேட்பாளர் தேர்வு எனக்கு மிகுந்த மனவருத்தத்தை அளித்துள்ளது. கட்சிக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களைப் புறக்கணிக்கும் போக்கு வேதனையளிக்கிறது." மேலும், "மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிமுகவை வளர்க்கப் பாடுபட்ட உண்மைத் தொண்டர்களைப் பழிவாங்கும் நடவடிக்கையில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் மற்றும் மாவட்டச் செயலாளர் எஸ். பவுன்ராஜ் ஆகிய இருவரும் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சுயநலப் போக்கு கொண்டவர்களுடன் இணைந்து என்னால் தொடர்ந்து பணியாற்ற முடியாத சூழல் உருவாகியுள்ளது. எனவே, மிகுந்த மனவேதனையுடன் மயிலாடுதுறை மாவட்ட அவைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தலைமைக்கு விசுவாசம் - தொண்டர்களிடம் மன்னிப்பு பதவியை ராஜினாமா செய்தாலும் கட்சியின் மீதான தனது பற்றை அவர் விட்டுக்கொடுக்கவில்லை. "பதவியைத் துறந்தாலும், என்றென்றும் அதிமுகவுக்கும், கழகத் தலைமைக்கும் விசுவாசமிக்க ஒரு சாதாரணத் தொண்டனாகத் தொடர்ந்து செயல்படுவேன். கட்சியின் நலன் கருதி நான் எடுத்துள்ள இந்த முடிவில் ஏதேனும் தவறு இருந்தால், ரத்தத்தின் ரத்தமான கழக உடன்பிறப்புகள் என்னை மன்னிக்க வேண்டும்" என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார். ஒரு மூத்த நிர்வாகி இவ்வாறு உருக்கமாகக் கடிதம் எழுதியிருப்பது மயிலாடுதுறை மாவட்ட அதிமுக தொண்டர்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும், அதே சமயம் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சையைக் கிளப்பிய மாவட்டச் செயலாளரின் பதில் பி.வி.பாரதியின் இந்த அதிரடி ராஜினாமா குறித்து செய்தியாளரிடம் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் எஸ். பவுன்ராஜ் கூறியது பதில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போல் அமைந்துள்ளது. "பாரதி ஒன்றும் பெரிய தியாகி அல்ல, அவர் போனால் போகட்டும்" அவர் போரார் என அதை போய் செய்தி எடுக்கிறீர்களா? என தொண்டர்கள் மத்தியில் அவர் விமர்சித்ததாக கூறப்படுகிறது. இது தேர்தல் நேரத்தில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்குமோ என்ற அச்சம் நடுநிலைத் தொண்டர்களிடையே எழுந்துள்ளது. தேர்தல் களத்தில் பாதிப்பு ஏற்படுமா? சீர்காழி தொகுதியில் பி.வி.பாரதிக்கு எனத் தனிப்பட்ட வாக்கு வங்கியும், செல்வாக்கும் உள்ளது. குறிப்பாக, அவர் எம்.எல்.ஏ-வாக இருந்த காலத்தில் செய்த பணிகள் மக்கள் மத்தியில் இன்னும் பேசப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில், தேர்தல் நெருங்கும் வேளையில் மாவட்ட அவைத் தலைவர் போன்ற ஒரு முக்கியப் பொறுப்பில் இருப்பவர் விலகுவது, கட்சிக்குள் ஒரு பிளவை ஏற்படுத்தக்கூடும் எனக் கருதப்படுகிறது. மாவட்டத் தலைமைக்கும், முன்னாள் எம்.எல்.ஏ-வுக்கும் இடையிலான இந்தப் போர், எதிர்க்கட்சிகளுக்குச் சாதகமாக அமைந்துவிடுமோ என்ற கவலையில் ரத்தத்தின் ரத்தங்கள் உள்ளனர். மயிலாடுதுறை மாவட்ட அரசியலில் புயலைக் கிளப்பியுள்ள இந்த ராஜினாமா படலம், வரும் நாட்களில் இன்னும் பல திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கழகத் தலைமை தலையிட்டு இந்தப் பிரச்சினையைச் சுமூகமாக முடிக்குமா அல்லது அதிருப்தி அலை தொடருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அவர் பெரிய தியாகி...அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பி.வி.பாரதி ராஜினாமா.. வெடித்த உட்கட்சி பூசல்...

