கோவை தெற்கு தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் அம்மன் அர்ஜுனன், கோவை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன் குமாரைச் சந்தித்து, தொகுதியில் நடைபெற்று வரும் முறைகேடுகள் குறித்து புகார் மனு ஒன்றை அளித்தார். செய்தியாளர்களைச் சந்தித்த அம்மன் அர்ஜுனன் தெரிவித்ததாவது; கோவை தெற்கு தொகுதி முழுவதும் கரூரில் இருந்து வந்த சுமார் 2,000 ரவுடிகள் முகாமிட்டுப் பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர். வாக்காளர்களை மிரட்டி பணம் கொடுத்து வருவதாக எங்களுக்குத் தொடர்ந்து புகார்கள் வருகின்றன. ஒரு ஓட்டுக்கு 5,000 ரூபாய் வீதம் விநியோகம் செய்யப்படுகிறது. இன்று முதல் பரிசுப்பொருட்களை வழங்கவும் திட்டமிட்டுள்ளனர். பணப்பட்டுவாடா குறித்து புகாரளித்தால், பறக்கும் படையினர் இரண்டு மணி நேரம் தாமதமாகவே சம்பவ இடத்திற்கு வருவதாக அவர் குற்றம் சாட்டினார். காவல்துறையினர் இன்னும் தி.மு.க.வின் கைப்பாவையாகவே செயல்படுகிறார்கள். காவல்துறை தற்போது ஸ்டாலின், உதயநிதி அல்லது செந்தில் பாலாஜி கட்டுப்பாட்டில் இல்லை, தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதை உணர்ந்து நேர்மையாக வேலை செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார். பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்க சென்ற அ.தி.மு.க தொண்டர்களை ரவுடிகள் கடித்ததாகக் குறிப்பிட்ட அவர், எங்க கட்சிக்காரர்களைக் கடித்து வைத்துள்ளார்கள்; அவர்கள் என்ன மிருக சாதியா? அவ்வளவு பசியா?" என ஆவேசமாக கேள்வி எழுப்பினார். மேலும், இத்தொகுதியில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், துணை ராணுவப் படையினரின் (Paramilitary) பாதுகாப்போடு தேர்தலை நடத்த வேண்டும் என்று ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாகக் கூறினார். மற்ற 233 தொகுதிகளில் இல்லாத வகையில் இங்கு மட்டும் ஏன் இவ்வளவு அத்துமீறல்கள் நடக்கின்றன என வினவிய அவர், திமுகவினர் செய்யும் முறைகேடுகளைப் பிடிக்கிக் கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்றார். மேலும், செய்தியாளர்கள் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகவும், தி.மு.க.வினரின் இந்தப் பணப்பட்டுவாடா புகார்களை எந்த ஊடகங்களும் வெளியிடுவதில்லை என்றும் தனது ஆதங்கத்தைக் கடுமையான சொற்களால் பதிவு செய்தார். பி. ரஹ்மான், கோவை
கோவை தெற்கு தொகுதியில் தி.மு.க. வினர் பணப்பட்டுவாடா; ஆட்சியரிடம் அ.தி.மு.க வேட்பாளர் புகார்


