நடப்பு ஆண்டு சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வுகள் மதிப்பெண்களைத் தாண்டி, வினோதமான காரணங்களுக்காக இணையத்தில் பேசுபொருளாகி வருகின்றன. ஏற்கனவே 12-ம் வகுப்பு கணித தேர்வு வினாத்தாளில் இருந்த க்யூஆர் கோடை ஸ்கேன் செய்தபோது, புகழ்பெற்ற ரிக் ஆஸ்ட்லியின் பாடலுக்கு அழைத்துச் சென்றது சர்ச்சையானது. தொடர்ந்து இப்போது 12-ம் வகுப்பு 'வரலாறு' (History) வினாத்தாளும் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கடந்த மார்ச் 30 அன்று நடைபெற்ற 12-ஆம் வகுப்பு வரலாறுத் தேர்வின் போது, வினாத்தாளில் இருந்த க்யூஆர் கோடை மாணவர்கள் ஸ்கேன் செய்துள்ளனர். அப்போது அது பாடப்பிரிவு தொடர்பான தகவல்களுக்குப் பதிலாக, பாலிவுட் பிரபலமும் சமூக வலைதள நட்சத்திரமுமான ஓர்ஹான் அவத்ரமணி (Orry) குறித்த கூகுள் தேடல் முடிவுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவர்கள், அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர, அந்தத் தகவல் காட்டுத்தீயாகப் பரவியது. Before they rickrolled everyone, now @cbseindia29 has printed Influencer ORRY on CBSE History question paper lmao 🤣 pic.twitter.com/mgutX9CmOO — Rithvik K (@BngRithvik) March 31, 2026 இந்த வைரல் செய்தி ஓரியின் கவனத்திற்கும் சென்றது. இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கலகலப்பான வீடியோவை வெளியிட்டுள்ளார். தயாரிப்பாளர் போனி கபூர் வீட்டில் தங்கியிருக்கும் ஓரியிடம், நடிகை குஷி கபூர் இந்த வினாத்தாளைக் காட்டுகிறார். அதை பார்த்த ஓரி, வியப்புடன் என்னது இது? ஓ கடவுளே. நான் சி.பி.எஸ்.இ வினாத்தாளிலேயே வந்துவிட்டேனா? என்று கேட்கிறார். அருகில் இருந்த போனி கபூர் கிண்டலாக, நீ சி.பி.எஸ்.இ வினாத்தாளில் இடம்பிடித்துவிட்டாய் என்றால், நீ வாழ்க்கையில் பெரிய இடத்திற்கு வந்துவிட்டாய் என்று அர்த்தம் எனக் கூறுகிறார். தொடர்ந்து அந்த கோடை ஸ்கேன் செய்து பார்த்த ஓரி, அது தனது தகவல்களையே காட்டுவதை உறுதிப்படுத்தி விட்டு, இது எனது கனவு நனவான தருணம் என மகிழ்ச்சியைப் வெளிப்படுத்தியுள்ளார். View this post on Instagram நடிகை அனன்யா பாண்டேவின் முகம் முன்பு ஒருமுறை தீபாவளி பட்டாசு பாக்கெட்டில் இடம் பெற்றிருந்தது. அப்போது அவர் கொடுத்த அதே ரியாக்ஷனை ஓரி இப்போது கிண்டலாகச் செய்துள்ளார். இதற்கு அனன்யா பாண்டே, இருந்தாலும் நீ என்னைப் போல 'கூல்' கிடையாது என ஜாலியாகப் பதிவிட்டுள்ளார். இணையவாசிகள் இதனைப் பல்வேறு விதமாக விமர்சித்து வருகின்றனர். சி.பி.எஸ்.இ வினாத்தாள் தயாரிப்பாளர்கள் எல்லாம் 'ஜென்-சி' (Gen-Z) தலைமுறையைச் சேர்ந்தவர்கள் போல, என் தங்கை தேர்வு எழுதிவிட்டு வந்தாள். அந்த கோடை ஸ்கேன் செய்தபோது சிரிப்புத் தாங்க முடிய வில்லை எனப் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். மொத்தத்தில், கல்விச் சூழலில் வழக்கமாக இருக்கும் அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் இந்த 'கியூஆர் கோடு' குளறுபடி இணையத்தில் ஒரு நகைச்சுவை அலையை ஏற்படுத்தியுள்ளது.
சி.பி.எஸ்.இ வினாத்தாளில் ஓரி... க்யூஆர் கோடை ஸ்கேன் செய்த மாணவர்களுக்கு காத்திருந்த 'ஜென்-சி' அதிர்ச்சி!



