கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குப்பங்குழி மேல தெருவைச் சேர்ந்த அன்பரசன் (54) கூலித் தொழிலாளி, இவரது மனைவி கலையரசி (48). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். அன்பரசன் மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்து, அடிக்கடி மது அருந்தி வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 18-ஆம் தேதி மது குடிப்பதற்காக மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். கலையரசி பணம் தர மறுத்ததால், கோபமடைந்த அன்பரசன் வீட்டில் இருந்த இரும்புக் கம்பியால் அவரை தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த கலையரசி காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மனைவி உயிரிழந்ததை அறிந்ததும், காவல்துறை விசாரணைக்கு பயந்து அன்பரசன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அவர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து காட்டுமன்னார்கோவில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம்; மனைவியின் உயிரைப் பறித்த கணவன்!


