USA Iran War: ஈரானுக்கு எதிராக செயல்பட அமெரிக்காவிற்கு உங்கள் நிலத்தை வழங்காதீர்கள் என, வளைகுடா நாடுகளுக்கு தெஹ்ரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய கிழக்கில் குவியும் அமெரிக்க படை: ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கி ஒரு மாதம் முடிவடைந்துள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் நிலவி, சர்வதேச கச்சா எண்ணெய் விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டு, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மத்திய கிழக்கில் படைகளை பெருமளவில் அதிகரிக்கும் நடவடிக்கையாக, யுஎஸ்எஸ் திரிபோலி கப்பலில் இருந்த 3,500 கடற்படை வீரர்கள் மற்றும் மாலுமிகள் மத்திய கிழக்கு வந்தடைந்ததாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் அறிவித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த பிராந்தியத்தில் அமெரிக்கா குவிக்கும் மிகப்பெரிய படை பலம் இதுவாகும். தயார் நிலையில் வீரர்கள்.. சென்ட்காம் வெளியிட்ட புகைப்படங்களில், வீரர்கள் போர் சீருடைகள் அணிந்து, தலைக்கவசங்கள் மற்றும் கண்ணாடிகளுடன் தயார் நிலையில் காணப்படுகின்றனர். இந்த கப்பற்படையினர், மத்திய கிழக்கில் ஏற்கனவே நிலைநிறுத்தப்பட்டுள்ள 50,000 அமெரிக்கப் படைகளுக்குத் துணையாக களமிறக்கப்பட்டுள்ளனர். அந்த கப்பலானது கடற்படை வீரர்களுடன் போக்குவரத்து மற்றும் தாக்குதல் போர் விமானங்களையும், நீர்நிலத் தாக்குதல் மற்றும் தந்திரோபாய பாதுகாப்பு கருவிகளையும் கொண்டுள்ளதாம். திரிபோலியைத் தவிர, யுஎஸ்எஸ் பாக்சர் மற்றும் மேலும் இரண்டு கப்பல்களும், மற்றொரு கடற்படைப் பயணப் பிரிவும் சான் டியாகோவிலிருந்து மத்திய கிழக்குக்குச் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளன. இதனால் மத்திய கிழக்குப் பகுதியில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. ஈரானில் தரை வழி தாக்குதலா? - நரகத்திற்கு வருக..! ஈரானுக்குள் தரைவழி தாக்குதலை மேற்கொள்ள அமெரிக்கா தயாராகி வருகிறது என்பதையே இந்த படை குவிப்புகள் உணர்த்துகின்றன. மோதலை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் தெஹ்ரான் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இதன் காரணமாக அந்நாட்டின் மின்சார உட்கட்டமைப்புகளை தாக்கும் திட்டத்தை நிறுத்தி வைத்து இருப்பதாகவும் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஆனாலும், மிகப்பெரிய அளவில் அங்கு தரைப்படை குவிக்கப்பட்டு வருவது, பேச்சுவார்த்தை சுமூகமாக அமையவில்லையோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், இதுநாள் வரை நடத்தி வந்த வான்வழி தாக்குதல் அமெரிக்காவிற்கு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகவும், கூடுதல் செலவினங்களை தவிர்க்கும் வகையிலேயே தற்போது தரைவழி தாக்குதலுக்கு தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும், ஈரானுக்கு எதிரான போர் நடவடிக்கைகளில் தரைப்படைகளை ஈடுபடுத்தும் எண்ணம் தனக்கு இல்லை என்று டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். ஈரான் வரவேற்பு.. இதனிடையே, ஈரானின் ஆங்கில நாளிதழான 'தெஹ்ரான் டைம்ஸ்'-இன் முதல் பக்கத்தில், "நரகத்திற்கு நல்வரவு" என்ற தலைப்பின் கீழ் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஈரானிய மண்ணில் கால் பதிக்கும் எந்தவொரு அமெரிக்கப் படையினரும் சவப்பெட்டியில்தான் வெளியேறுவார்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளுக்கு வார்னிங்.. ஈரான் அதிபர் மசவுத் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “ ஈரான் முன்னெச்சரிக்கைத் தாக்குதல்களை நடத்துவதில்லை என்று நாங்கள் பலமுறை கூறியுள்ளோம், ஆனால் எங்கள் உள்கட்டமைப்பு அல்லது பொருளாதார மையங்கள் குறிவைக்கப்பட்டால் நாங்கள் கடுமையாகப் பதிலடி கொடுப்போம். பிராந்திய நாடுகளுக்கு: நீங்கள் வளர்ச்சியையும் பாதுகாப்பையும் விரும்பினால், எங்கள் எதிரிகள் உங்கள் நிலங்களிலிருந்து போரை நடத்த அனுமதிக்காதீர்கள்” என குறிப்பிட்டுள்ளார். அதாவது வளைகுடா நாடுகளின் மண்ணிலிருந்து அமெரிக்கா படைகள் இயங்க அனுமதிக்க வேண்டாம் என ஈரான் எச்சரித்துள்ளது.
இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



