காதலின் ஆழத்தை இதை விட ஆழமாக சொன்ன பாடல் வேறு எதுவும் இல்லை என்று தனுஷ் அப்பா கஸ்தூரி ராஜா எழுதிய பாடலை கவிஞர் யுகபாரதி கூறியுள்ளார். இந்த பாடல் காலம் கடந்தாலும் இன்றைக்கும் ஒரு சூப்பர் ஹிட் பாடலாக நிலைத்திருக்கிறது. ராஜ்கிரன் நாயகனாக நடித்த என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கஸ்தூரி ராஜா. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களை இயக்கிய இவர், 1994-ம் ஆண்டு தாய் மனசு என்ற படத்தை இயக்கியிருந்தார். சரவணன், பப்ளு ப்ரித்விராஜ், விஜயகுமார், மனோரமா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலர் நடித்திருந்த இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. படத்தின் அனைத்து பாடல்களையும் கஸ்தூரி ராஜாவே எழுத, இளையராஜா இசையமைத்திருந்தார். படத்தில் வரும் தூதுவளை இலை அரச்சி என்ற பாடல், இன்றைக்கும் கிராமத்து பேருந்துகளில் ஒலிக்கும் முக்கிய பாடலாக இருக்கிறது. இது குறித்து பேசியுள்ள கவிஞர் யுகபாரதி, இந்த பாடலில் ஐயா கஸ்தூரி ராஜா எவ்வளவு காதலோடு இருக்கிறார்? இருந்தார் இருக்க போகிறார் என்பதை அந்த பாடலின் சரணத்தில் காட்டிருப்பார். அந்த பாடலை கேட்டால் உங்களுக்கு தெரியும். ஊர் தூங்கும் வேளையிலும் நான் தூங்கவில்லை, யார் பேச்சை கேட்டாலும் என் காதில் கேட்பதெல்லாம் உன் பேச்சுதான் என்று எழுதி இருப்பார். இதை நானே கூட எழுதிவிடுவேன். அடுத்து எத்தனை நினைப்பு என்மேல் இருக்கு எட்டிப்போகலமா? கட்டுப்பாடு இருந்தும் கட்டிக்கும் முன்னே ஒட்டிக்கொள்ளலாமா என்று எழுதி இருப்பார், இதை முத்துக்குமார் ரேஞ்சுக்கு யோசித்தாலே எழுதிவிடலாம். ஆனால் அடுத்த வரி எழுதியிருப்பார். முத்தமிட்டா மோசம் என்ன உண்டாகும், என்று எழுதிவிட்டு கடைசி வரியாக சத்தமிட்டா உன் நிலைமை என்னாகும் எனறு முடிப்பார். View this post on Instagram A post shared by Cinema Vikatan (@cinemavikatan) சத்தமிட்டா உன் நிலைமை என்னாகும் என்பது தான் தமிழ் மரபில் உள்ள, பெண் தன் காதலை சொல்லும் உச்சபட்சமான இடம். ஊரார் பார்த்துவிட்டால் என்ன செய்வது என்று இருக்கிறதே இதுதான் ஒரு மரபார்ந்த சிந்தனை. அந்த மரபோடு பாடல்கள் எழுதி தமிழ் சினிமாவுக்கு வளம் சேர்த்த கவிஞர்களில் ஐயா கஸ்தூரி ராஜாவும் ஒருவர் என்றுளு யுகபாரதி கூறியுள்ளார்.
முத்தமிட்ட மோசம் என்ன உண்டாகும்? ஒரு பெண் தன் காதலை சொல்லும் உச்சக்கட்டம்: தனுஷ் அப்பா பாட்டுக்கு யுகபாரதி விளக்கம்



