ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியான நிலையில், அப்படத்தின் ஃப்ரீலான்ஸ் எடிட்டரான உமா சங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரியுள்ளார். இதற்கு படக்குழு தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்துள்ள நடிகர் விஜயின் கடைசிப் படமாக “ஜனநாயகன்” உருவாகியுள்ளது. கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பெரும் பொருட்செலவில் உருவான இந்த படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இந்த படம் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் நடிப்பில் தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் ஆகும். ஜனநாயகன் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, நரேன், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, பிரகாஷ்ராஜ், பாபி தியோல் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். 2026ஆம் ஆண்டின் பொங்கலுக்கு ஜனநாயகன் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதற்கேற்ப முன்னேற்பாடு பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆனால் படம் தணிக்கை சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. ரிலீஸ் தேதி நெருங்கிய நிலையில் பட நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தை நாடியது. ஆனால் ஜனநாயகன் படக்குழுவுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. இதற்கிடையில் தேர்தலும் அறிவிக்கப்பட்டதால் படம் ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் ஏப்ரல் 10ம் தேதி ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானது. 3 மணி நேர படமும் வெளியானதால் பெரும் சர்ச்சை வெடித்தது. பட நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்ட புகார் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் படத்தை பகிர்ந்ததாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் ஜனநாயகன் படத்தின் ஃப்ரீலான்ஸ் உதவி எடிட்டராக பணியாற்றிய நபர் கைது செய்யப்பட்டார். இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில் ஜனநாயகன் படத்தின் ஃப்ரீலான்ஸ் எடிட்டரான திருவேற்காட்டைச் சேர்ந்த உமா சங்கர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அதில் ஜனநாயகன் படத்தை நான் யாருடனும் சென்று பார்க்கவில்லை. யாருடனும் பகிரவில்லை. படம் இணையத்தில் வெளியானதில் எனக்கு எந்தவித பங்கும் இல்லை. உண்மை குற்றவாளிகளை பாதுகாக்கும் பொருட்டு அப்பாவியான தன்னை வழக்கில் சேர்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜனநாயகன் பட நிறுவன தரப்பு முன் ஜாமீன் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மனுதாக்கல் செய்யவுள்ளதாக கூறியுள்ளது. படம் இணையத்தில் வெளியான சமயத்தில் உமா சங்கர் இதய நோய் என கூறி மருத்துவமனையில் சேர்ந்துள்ளார் எனவும் பட நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து இடைக்கால மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி வழக்கை வழக்கை ஏப்ரல் 30ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.
இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


