மணல் எங்கு பார்த்தாலும் பொன்னிறமாக ஜொலிக்கும் இதுதான் ராஜஸ்தான் தார் பாலைவனத்தின் அடையாளம். ஆனால், கடந்த ஏப்.3 அன்று இந்த அடையாளம் தலைகீழாக மாறியது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை மணலுக்குப் பதில் 'வெள்ளைப்போர்வை' போர்த்தியது போல ஐஸ் கட்டிகள் குவிந்து கிடந்ததைக் கண்டு உள்ளூர் மக்கள் மிரண்டு போயினர். பிகானேர் மாவட்டத்தின் அர்ஜுன்சர் மற்றும் ராஜியாசர் பகுதிகளில் நிகழ்ந்த இந்த அபூர்வ வானிலை மாற்றத்தால், வெப்பம் தடாலடியாகக் குறைந்தது. சாலைகள் அனைத்தும் தடிமனான ஐஸ் கட்டிகளால் மூடப்பட்டதால், பாலைவனப் பிரதேசம் அப்படியே காஷ்மீரின் பனி படர்ந்த பள்ளத்தாக்குகளைப் போலக் காட்சியளித்தது. வனத்துறை அதிகாரி (IFS) பர்வீன் கஸ்வான் பகிர்ந்த இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இது பார்ப்பதற்குப் பனிப்பொழிவு (Snowfall) போலத் தெரிந்தாலும், உண்மையில் இது மிகத்தீவிரமான ஆலங்கட்டி மழை (Hailstorm) ஆகும். மத்திய தரைக்கடல் பகுதியில் உருவாகி வரும் குளிர்ந்த காற்று, பாலைவனத்தின் சுட்டெரிக்கும் வெப்பக் காற்றுடன் மோதியதே இதற்குக் காரணம். இந்த மோதலால் உருவான வலுவான காற்றோட்டம், நீர்த்துளிகளை வளிமண்டலத்தின் மிக உயரமான உறைநிலைப் பகுதிக்குத் தள்ளியது. அங்கு அவை சிறு சிறு ஐஸ் பந்துகளாக (ஆலங்கட்டிகள்) மாறி, எடை தாங்க முடியாமல் தரையில் கொட்டித் தீர்த்தன. இந்தக் காட்சி பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், உள்ளூர் விவசாயிகளுக்கு இது பெரும் துயரத்தைத் தந்துவிட்டது. கோதுமை, இசப்கோல் (Isabgol) போன்ற 'ரபி' பருவப் பயிர்களை அறுவடை செய்ய விவசாயிகள் காத்திருந்தனர். பளிங்குக்கல் அளவிலான ஆலங்கட்டிகள் பயிர்களைச் சிதைத்ததில் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குப் பயிர் காப்பீடு மூலம் நிவாரணம் வழங்க நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். ராஜஸ்தானில் ஏப்ரல் மாதத்தில் இவ்வளவு அதிகப்படியான ஆலங்கட்டி மழை பெய்வது மிகவும் அரிதானது. இது மாறிவரும் காலநிலை மாற்றத்தின் அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) தகவல்படி, ஜெய்ப்பூர் மற்றும் ஜோத்பூர் பகுதிகளில் ஏப்.7-ம் தேதி வரை இதேபோன்ற சீரற்ற வானிலை நீடிக்கும் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



