அரை நூற்றாண்டு கால அமைதிக்குப் பிறகு, நிலவின் தளம் மீண்டும் மனிதக் குரல்களைக் கேட்கத் தயாராகிவிட்டது. சரியாக ஏப்.2-ஆம் தேதி, அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து எஸ்.எல்.எஸ் எனும் பிரமாண்ட ராக்கெட், தீப்பிழம்புகளை கக்கி கொண்டு விண்ணில் சீறிப் பாய்ந்தது. 4 விண்வெளி வீரர்கள் பயணிக்கும் இந்த 'ஓரியன்' விண்கலம், நிலவை நோக்கி நேர்க்கோட்டில் செல்லப் போவதில்லை. மாறாக, நிலவின் ஈர்ப்பு விசையையே ஒரு 'கவண்' போலப் பயன்படுத்தி, நிலவைச் சுற்றி வளைந்து மீண்டும் பூமிக்குத் திரும்பும். இதற்கு 'Free-return trajectory' என்று பெயர். விண்கலத்தைத் திருப்புவதற்குத் தனியாக எரிபொருள் செலவிடத் தேவையில்லை என்பதே இதன் ஸ்பெஷல். நிலவைச் சுற்றும் ஆர்டெமிஸ் 2 விண்கலத்தில் பயணிக்கும் நாசா வீரர்கள், Orientale basin என்ற நிலவின் பிரம்மாண்ட பள்ளத் தாக்கைத் முழுமையாகப் படம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இப்பகுதியை மனிதக் கண்கள் நேரடியாகவும் முழுமையாகவும் காண்பது வரலாற்றிலேயே இதுவே முதல்முறை. 3.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு விண்கல் மோதியதால் உருவான இந்த 965 கி.மீ. அகலம் கொண்ட பள்ளம், நிலவின் மேற்குப் பகுதியின் விளிம்பில் அமைந்துள்ளது. இந்தப் பயணம் நிலவின் மேற்பரப்பிலிருந்து சுமார் 7,600 கி.மீ தொலைவிற்கு அப்பால் வரை செல்லவிருக்கிறது. மனித வரலாற்றிலேயே பூமியிலிருந்து இவ்வளவு தொலைவிற்கு மனிதர்கள் பயணிப்பது இதுவே முதல்முறை. இதுவரை எட்டாத தூரத்தைத் தொட்டு ஆர்டெமிஸ்-II புதிய சாதனை படைக்கப்போகிறது. இந்த 4 பேர் கொண்ட குழுவில் இருப்பவர்கள் சாதாரண வீரர்கள் மட்டுமல்ல, வரலாற்றை மாற்றி எழுதுபவர்கள், விக்டர் குளோவர், ஆழமான விண்வெளிக்குப் பயணிக்கும் முதல் கறுப்பினத்தவர். கிறிஸ்டினா கோச், நிலவை நோக்கிப் பயணிக்கும் முதல் பெண்மணி. ஜெரமி ஹேன்சன், அமெரிக்கர் அல்லாத (கனடா நாட்டைச் சேர்ந்த) முதல் விண்வெளி வீரர். பயணத்தின் முடிவில் பூமிக்குத் திரும்பும்போதுதான் உண்மையான 'த்ரில்' இருக்கிறது. பூமியின் வளிமண்டலத்திற்குள் ஓரியன் விண்கலம் நுழையும்போது அதன் வேகம் மணிக்கு 40,000 கிலோமீட்டர். மனிதர்கள் பயணிக்கும் ஒரு விண்கலம் மேற்கொள்ளும் அதிவேகப் பயணம் இதுதான். இறுதியில் பசிபிக் பெருங்கடலில் பாதுகாப்பாகத் தரையிறங்கும். இந்த ஆர்டெமிஸ்-II நிலவில் தரை இறங்காது; மாறாக, மனிதர்கள் அங்கு தங்குவதற்கான தொழில்நுட்பங்களைச் சோதித்துப் பார்க்கும். இது வெற்றிகரமாக முடிந்தால், அடுத்ததாக 2028-ல் திட்டமிடப்பட்டுள்ள ஆர்டெமிஸ்-III மூலம் மனிதர்கள் நிலவில் கால் பதிப்பார்கள். 2030-க்குள் நிலவில் தடம் பதிக்கத் துடிக்கும் சீனாவுக்கும், 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டத் துடிக்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான இந்த 'விண்வெளிப் போட்டி' இப்போது சூடுபிடித்துள்ளது.
இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



