முல்லை மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண்ணிற்கு ஒட்டுசுட்டான்-மாங்குளம் வீதியில் நடந்த கொடுமை!!

0
601

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிற்றூழியராக கடமையாற்றும் பெண் ஊழியர் ஒருவர் மீது ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் காட்டுப்பகுதியில் வைத்து தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது,

இவ்வாறு ஊழியர் மீது எதோ ஒரு திரவத்தை வீசி தாக்குதல் மேற்கொண்ட நிலையில் கண்கள் பாதிக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்,

இந்த சம்பவம் தூர பிரதேசங்களில் இருந்து வனப்பகுதிகளை கடந்து பணிக்கு வரும் ஊழியர்களை கடும் அச்சத்தில் தள்ளியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது,

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் பணியாற்றி வருகின்ற பெண் சிற்றூழியர் ஒருவர் நேற்று 07.01.2022 இரவு தன்னுடைய கடமைகளை நிறைவு செய்து இன்று அதிகாலை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இருந்து கொக்காவில் வீதி துணுக்காய் எனும் முகவரியில்  அமைந்திருக்கின்ற தன்னுடைய வீட்டிற்கு மோட்டார் வண்டியில் ஒட்டுசுட்டான் நகரத்தை தாண்டி மாங்குளம் நோக்கி சென்று கொண்டிருந்த போது வனப்பிரதேசத்தில் வீதியில் நின்ற இருவர் குறித்த ஊழியர் மீது ஏதோ ஒரு திரவத்தை வீசியுள்ளனர்,

இதனால் கண்கள் பாதிக்கப்பட்ட குறித்த ஊழியர்  மோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்ல முடியாத நிலையில் குறித்த பகுதியில் இருந்த ஒரு வீட்டில் தஞ்சம் அடைந்து அங்கிருந்து அவசர தொலைபேசி ஊடாக நோயாளர் காவுவண்டியை அழைத்து  மாவட்ட வைத்தியசாலைக்கு வருகை தந்திருக்கிறார்,

இந்நிலையில் அவருடைய கண்களில் பார்வை பிரச்சினை ஆகியுள்ள நிலையில் என்ன திரவம் வீசப்பட்டுள்ளது என்பது தொடர்பில் அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன,

இவ்வாறான பின்னணியில் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் மாங்குளம் மல்லாவி துணுக்காய் உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் சுமார் 20 வரையான ஊழியர்கள் குறிப்பாக பெண் ஊழியர்கள் குறித்த பகுதிகளை கடந்து வனப்பகுதி ஊடாக பல்வேறு அச்சத்துக்கு மத்தியிலும் காட்டு யானைகள் அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் வைத்தியசாலையில் கடமையாற்ற வருகை தந்து கொண்டிருக்கின்ற போது இவ்வாறான ஒரு தாக்குதலை எதிர்கொண்டுள்ளமை ஆனது மேலும் அச்சத்தை உண்டு பண்ணியுள்ளதாக பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்,

புதுக்குடியிருப்பு-மன்னாகண்டால் மற்றும் புதுக்குடியிருப்பு-கேப்பாப்புலவு, ஒட்டுசுட்டான்-மாங்குளம் போன்ற ஆள் நடமாட்டம் இல்லாத வீதிகளில் இவ்வாறான வழிப்பறி கொள்ளைகள் இடம்பெற்றுள்ளன, வேலை விட்டு வரும் பெண் ஊழியர்களில் தங்க சங்கிலி அறுத்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன,

இராணுவ பாதுகாப்புகள் வீதிகளில் போடப்பட்டாலும் இவ்வாறான வழிப்பறி கொள்ளைகள் நடக்கின்றன என்பது வருத்தத்திற்குரிய விடையமாகும்,

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தூர இடங்களில் இருந்து மோட்டார்சைக்கிளில் வரும் ஊழியர்களே மிகவும் கவனமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறோம், மிகவும் பாதுகாப்பாக பஸ்களில் பயணம் செய்வது இவ்வாறான பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்க முடியும்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here