க.பொ.த உயர்தரப் பரீட்சை குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கல்வி அமைச்சு!

0
312

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை பெப்ரவரி (07-02-2022) முதல் 2,439 பரீட்சை நிலையங்களில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா (Kapila Perera) தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த ஓகஸ்ட் மாதம் பரீட்சையை நடத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும், கொரோனா தொற்று பரவல் காரணமாக 6 மாதங்களுக்குப் பின்னர் அடுத்த மாதம் பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பரீட்சைகள் திணைக்களம் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பரீட்சைகளை ஒத்திவைக்குமாறு பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், மாகாண, வலய கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஏனைய தரப்பினர் பலரது கருத்துக்களைப் பெற்ற பின்னரே பரீட்சைக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், பரீட்சை நடாத்துவதற்காக பாடசாலைகள் மற்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கு அனுமதி அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கமைவாக க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் குறித்த திகதியில் ஆரம்பமாகி முடிவடையும் எனவும் கபில பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தமுறை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டை இல்லாத பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று பதிவிறக்கம் செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here