மன்னார் உதைப்பந்தாட்ட வீரர் மரணம்; தாயார் விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை!!

0
124

இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணி தமிழ் வீரரான டக்சன் பியுஸ்லஸ் நேற்றைய தினம் உயிரிழந்த செய்தி பெரும் பரப்பரப்பினை ஏற்படுத்தியிருந்தது.

மன்னார் மாவட்டத்தை சேர்ந்த 31 வயதான டக்ஸன் பியுஸ்லஸ் மாலைத்தீவில் உயிரிழந்திருந்தார்.

மாலைதீவில் தொழில்சார் கழக மட்டப் போட்டிகளில் விளையாடி கொண்டிருந்த போது அவர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விளையாட்டுத்துறையை கொண்டாடும் ஒவ்வொருவருக்கும் டக்சன் பியுஸ்லஸ் மரணம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு பெரும் இழப்பாகும். மன்னார் பனங்கட்டு கொட்டு பகுதியில் இருந்து பட்டி தொட்டி எல்லாம் தெரியும் அளவுக்கு தனது கால்பந்தாட்டத்தின் திறமையினால் மிளிர்ந்தவன் டக்சன் பியுஸ்லஸ்.

யார் இந்த உதைப்பந்தாட்ட வீரன்..

1990 ஆண்டு பிறந்த டக்சன் பியுஸ்லஸ் சிறுவயதில் இருந்தே கால்பந்தாட்டத்தின் தீவிர ரசிகன் ஆவான். கால் பந்தின் மேல் கொண்ட தீரா காதல் காரணமாக பாடசாலை காலங்களில் பாடசாலை அணிக்காக பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பல வெற்றிகளுக்கு சொந்தக்காரன்.

பாடசாலை மட்டத்தில் மாத்திரம் இல்லை கழக ரீதியான போட்டிகளிலும் பிரகாசித்த பியூஸ் ஒரு கட்டத்தில் கால்பந்தாட்டத்தில் தமிழர்களுக்கான அடையாளம் ஆனான். தேசிய போட்டிகள் மாத்திரமின்றி சர்வதேச போட்டிகளிலும் பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.

தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்த டக்சன் பியுஸ்லஸ் பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளை கடந்து பல காயங்கள் உபாதைகளை பொருட்படுத்தாமல் நாட்டுக்காகவும் தனது அடையாளத்தை நிலைப்படுத்த போராடிய ஒரு வீரன். சொந்த நாட்டில் கால்பந்தாட்ட அணிக்காக விளையாடினாலும் தொழில் சார் அங்கீகாரம் என்பது தமிழர்களுக்கு எப்போதும் எட்டாக்கனியாக உள்ளது.

நீண்ட போராட்டங்களின் பின்னர் தனக்கான அங்கீகாரத்துக்காக மாலைதீவில் கிடைத்த வாய்ப்பின் காரணமாக அங்குள்ள கழக அணி ஒன்றுடன் ஒப்பந்த ரீதியில் பணியாற்றி வந்த நிலையிலே நேற்று முன்தினம் (26) இந்த துயர் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த துயரமான சம்பவம் தொடர்பில் இளைஞனின் தாயார் தெரிவிக்கையில்

‘‘நாட்டுக்கு பெருமை சேர்த்த எனது பிள்ளைக்கு என்ன நடந்ததென்று தெரியவில்லை என்றும், மகனின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும், தனது மகனின் மரணத்திற்கு உரிய நீதியினை பெற்றுத்தருமாறும் உயிரிழந்த டக்சனின் தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடமராட்சி வதிரி டயமன்ஸ் விளையாட்டுக்கழக வீரரும், இலங்கை கால்பந்தாட்ட அணியின் வீரருமாகிய பியூஸின் உயிரிழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பலரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here