2023 இன் சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீராங்கனையாக இலங்கை பெண் தெரிவு.!

0
126

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வருடாந்தம் வழங்கப்படும் விருதுகளில் ஒன்றான வருடத்தின் அதிசிறந்த ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீராங்னை விருது இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்துவுக்கு கிடைத்துள்ளது. ஐசிசி மகளிர் சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட் அணி, ஐசிசி மகளிர் ரி20 கிரிக்கெட் அணி ஆகியவற்றின் தலைவியாக ஐசிசியினால் பெயரிடப்பட்டிருந்த அத்தபத்துவின் திறமைக்கு இந்த விருது சான்று பகர்கின்றது.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 13 வருடங்களாக விளையாடிவரும் 33 வயதான அத்தபத்து வென்றெடுத்த முதலாவது அதி உயரிய ஐசிசி விருது இதுவாகும். 2023ஆம் ஆண்டில் அவர் 8 இன்னிங்ஸ்களில் 2 சதங்கள், ஒரு அரைச் சதம் உட்பட மொத்தமாக 415 ஓட்டங்களைப் பெற்றார். அவரது துடுப்பாட்ட சராசரி 69.16 ஆகவும் ஸ்ட்ரைக் ரேட் 125.37 ஆகவும் அமைந்திருந்தன. அத்துடன் 47 பவுண்டறிகளையும் 21 சிக்ஸ்களையும் விளாசியிருந்தார். பந்துவீச்சில் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

கடந்த வருடம் முழுவதும் அற்புதமான திறமைகளை வெளிப்படுத்தியதுடன் தலைமைத்துவத்தில் சிறந்த ஆளுமையைக் கொண்டிருந்தார். அத்துடன் தலைவி மற்றும் வீராங்கனை என்ற இரண்டு நிலைகளிலும் அவர் தனது ஆற்றல்களை அதிகப்பட்சமாக வெளிப்படுத்தியிருந்தார். மழையினால் பாதிக்கப்பட்ட பங்களாதேஷுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 1 – 0 என்ற வெற்றியுடன் 2023ஆம் ஆண்டை சமரி அத்தபத்து ஆரம்பித்தார்.

முதல் இரண்டு போட்டிகள் மழையினால் முற்றாக கைவிடப்பட்ட நிலையில் தீர்மானம் மிக்க 30 ஓவர்களைக் கொண்ட கடைசிப் போட்டியில் 60 பந்துகளில் 64 ஓட்டங்களை விளாசி இலங்கையின் வெற்றிக்கும் தொடர் வெற்றிக்கும் அடிகோலினார். நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப் பெரிய, சாதனைமிகு திருப்புமுனை ஏற்பட்டது.

நியூஸிலாந்துக்கு எதிராக அத் தொடரில் இலங்கையை முதல் தடவையாக வெற்றிகொள்ளவைத்த (2 – 1) பெருமை அத்தபத்துவை சாருகிறது. காலி சர்வதேச விளையாட்டரங்கில் கடந்த வருடம் ஜூலை மாதம் நடைபெற்ற அத் தொடரின் முதலாவது போட்டியில் ஆட்டம் இழக்காமல் 108 ஓட்டங்களையும் தீர்மானம் மிக்க கடைசிப் போட்டியில் ஆட்டம் இழக்காமல் 140 ஓட்டங்களையும் அழுத்தங்களுக்கு மத்தியில் குவித்து தொடர் நாயகி ஆனார்.

மழையினால் நீண்ட நேரம் தடைப்பட்ட நியூஸிலாந்துக்கு எதிரான கடைசிப் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமையில் நிர்ணயிக்கப்பட்ட 196 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 4ஆவது ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 6 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஆனால், அதன் பின்னர் அதிரடியில் இறங்கிய அத்தபத்து 60 பந்துகளில் சதத்தைக் குவித்து, மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஐந்தாவது அதிவேக சதத்தைப் பதிவுசெய்தார்.

அவரும் நிலக்ஷிகா சில்வாவும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 190 ஓட்டங்கள், மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கையின் அதிகூடிய இணைப்பாட்ட சாதனையாக அமைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here