வவுனியா மைதானத்தில் வாக்கிங் செய்ய வந்த பெண்ணிற்கு ஷாக்கிங் கொடுத்த திருடன்.!

0
161

வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபயிற்சிக்கு வருகை தந்தவரின் நகைகளை திருடிய சம்பவம் தொடர்பில் 32 வயது இளைஞன் ஒருவர் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் நடை பயிற்சிக்காக கடந்த சில நாட்களாக வவுனியா நகரசபை மைதானத்திற்கு வந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் வழமை போன்று வியாழக் கிழமை (15.02) மாலையும் நகரசபைக்கு வருகை தந்துள்ளார். இதன் போது தான் அணிந்திருந்த சங்கிலி, காப்பு உள்ளிட்ட 4 பவுண் தங்க ஆபரணங்களை நகரசபை வளாகத்தில் உள்ள மோட்டர் சைக்கிள் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்ட தனது மோட்டர் சைக்கிள் இருக்கைக்குள் வைத்து பூட்டி விட்டு நடைப் பயிற்சிக்கு சென்றுள்ளார்.

நடைபயிற்சி முடிந்த பின்னர் தனது மோட்டர் சைக்கிளை எடுப்பதற்காக குறித்த பெண் வருகை தந்த போது அவரது மோட்டர் சைக்கிள் இருக்கை உடைக்கப்பட்டு அதில் இருந்த நகைகள் திருடப்பட்டிருந்தன. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவில் இரவு முறைப்பாடு செய்திருந்தார்.

இதன்போது, குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா, பம்பைமடுப் பகுதியைச் சேர்ந்த 32 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது திருடப்பட்ட ஆறு அரை லட்சம் ரூபாய் பெறுமதியான 4 பவுண் நகைகளும் உடமையில் இருந்து மீட்கப்பட்டதுடன், திருட்டுச் சம்பவத்தின் போது சந்தேக நபர் தப்பிச் செல்ல பயன்படுத்திய மோட்டர் சைக்கிளும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளின் பின் கைது செய்யப்பட்ட நபரையும், மீட்கப்பட்ட பொருட்களையும் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here