சிங்கப்பெண்.. இன்று சாதனை செல்வி ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள்..!

0
137

இன்று தமிழகத்தின் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாள். தமிழகத்தின் இரும்பு பெண்மணியாக தொண்டர்களால் இன்றளவும் நினைவு கூரப்பட்டு வருகிறார். கட்சியினர் அரசியல் ஆதாயத்திற்காக ஜெயலலிதாவை மறந்தாலும், உண்மை தொண்டர்கள் இன்றளவிலும் நினைவில் வைத்திருக்கின்றனர். திரைப்பட நடிகை, அதிமுகவின் கொள்கைப் பரப்பு செயலாளர், பொதுச்செயலாளர், தமிழகத்தின் முதல்வர் என தான் வகித்த ஒவ்வொரு பதவியிலும், பணியிலும் தனி முத்திரை பதித்தவர். ஜெயலலிதா சிறு வயது முதலே நிறைந்த அறிவு, பரதநாட்டியம், பள்ளி இறுதியில் மாநிலத்திலேயே முதலிடம், கர்நாடக இசை என பன்முகத் திறமை வாய்ந்தவராகவே திகழ்ந்தார்.

தமிழ் திரையுலகில் வெண்ணிற ஆடை கதாநாயகியாக அறிமுகமானார். அடுத்தடுத்து ஏராளமான திரைப்படங்கள் குவியத் தொடங்கின. எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்த ஆயிரத்தில் ஒருவன், ஒளிவிளக்கு, எங்கள் தங்கம், தனிப்பிறவி, முகராசி, குடியிருந்த கோவில், நம்நாடு என 28 படங்களை வெற்றிப்படங்களாக அள்ளித் தந்தவர். எம்ஜிஆர் மட்டுமல்ல சிவாஜி, எஸ்.எஸ்.ஆர்., ஜெய்சங்கர், முத்துராமன், என்.டி.ஆர்., நாகேஸ்வரராவ், தர்மேந்திரா என அன்றைய முண்ணனி கதாநாயகர்களுடனும் இணைந்து வெள்ளி விழா படங்கள் கொடுத்தவர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் 127 படங்களில் நடித்தவர். ஜெயலலிதா 7 மொழிகளில் பேசும் திறமை படைத்தவர். சினிமாவில் இருந்து அரசியலில் 1980ல் நுழைந்த ஜெயலலிதா, முதலில் கொள்கை பரப்புச் செயலாளராக தான் நியமிக்கப்பட்டார். அடுத்தடுத்து , சத்துணவுத்திட்ட உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர், முதல்வர் என உயரம் தொட்டார். அதிமுகவில் எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் அவரது இடத்தை நிரப்ப பலர் போட்டியிட்டு தோற்றுப் போயினர். சில மாதங்களிலேயே பிளவுபட்ட கட்சியை ஒருங்கிணைத்து ஆட்சி கட்டிலில் அமர்ந்தார்.

ஜெயலலிதா 17 ஆண்டுகள் திரையுலகில் முண்ணனி நடிகையாகவும், தமிழகத்தில் 6 முறை முதல்வராகவும், அவர் வாழ்ந்த காலம் வரை 29 ஆண்டுகள் அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் இருந்தார். தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே இந்திராகாந்திக்கு பிறகு இரும்பு பெண்மணி என கொண்டாடப்பட்டவர் ஜெயலலிதா. இவரது ஆட்சியில் பெண்கள் நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அதிரடியாக செயல்படுத்தினார்.

குறிப்பாக தொட்டில் குழந்தை திட்டம், மழைநீர் சேமிப்புத் திட்டம், ரேஷனில் இலவச அரிசி, அம்மா உணவகம், மகளிர் காவல் நிலையம், இலவச லேப்டாப் போன்ற திட்டங்கள் இந்தியாவின் மற்ற மாநிலங்களும் தமிழகத்தை பார்த்து வியந்த திட்டங்கள். அம்மா உணவகம், அம்மா மருந்தகங்கள், தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் போன்ற திட்டங்கள் எல்லாம் தற்போது வழக்கொழிந்து செயல்படாமல் இருப்பதால், பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

வீடுகள் தோறும் கட்டாய மழைநீர் சேகரிப்பு, லாட்டரி சீட்டு ஒழிப்பு, காவிரி தீர்ப்பு அரசிதழில் வெளியிட செய்தது, முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டியது என அடுக்கடுக்கான சாதனைகளை புரிந்தவர். அவர் வாழ்வில் குழந்தைப் பருவம் முதலே பல்வேறு சோதனைகள் . அத்தனை சோதனைகளையும், சாதனைகளாக்கி இரும்பு பெண்மணியாக வலம் வந்தார். அவர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் தொண்டர்களின் இதயங்களில் அவரது செயல்பாடுகளால் இன்றளவும் வாழ்ந்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here