கச்சத்தீவு திருவிழா; 4454 இலங்கையர்கள் பங்கேற்பு – இந்தியர்கள் புறக்கணிப்பு.!

0
103

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் (23) ஆரம்பமாகிய நிலையில், 4454 இலங்கையர்கள் பங்கேற்றதுடன், இந்தியர்கள் குறிப்பாக தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையர்கள் மாத்திரமன்றி இந்திய பக்தர்களும் இணைந்து வருடம்தோறும் வெகு விமர்சையாக இடம்பெறும் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது, நேற்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழாவில் சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இடம்பெற்றன.

வருடாந்த திருவிழா திருப்பலி நிகழ்வு நேற்று காலை 7 மணிக்கு யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இந்த திருவிழாவிற்கு இலங்கையில் இருந்து 4454 பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்திய பக்தர்கள் மீனவர்களின் விடுதலையை வலியுறுத்தி எவரும் வருகை தரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து வந்த பக்தர்கள் சிலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்.

திருவிழாவில் பக்தர்களின் நலன் கருதி சுகாதார வசதிகள் போக்குவரத்து ஒழுங்குகள், உணவு வசதிகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறித்த திருவிழாவில் கடற்படை உயர் அதிகாரிகள், ஜனாதிபதியின் செயலாளர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் இலங்கை நீதிமன்றத்தால் தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்களுக்கு சிறை தண்டனை விதிப்பதைக் கண்டித்தும் அவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் நேற்று முதல் சாகும்வரை உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்தநிலையில் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்கள் மூவருக்கு நீதிமன்றம் ஓராண்டு முதல் இரண்டு ஆண்டு வரை சிறை தண்டனையும், படகோட்டிகளுக்கு 6 மாத சிறை தண்டனையும் விதித்துள்ளது.

சிறை தண்டனை விதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் சிங்கள கைதிகளுடன் வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.

இதேவேளை ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் நடைபெறும் கச்சத்தீவு திருவிழாவையும் தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்கள் இந்த ஆண்டு புறக்கணித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here