உலகளாவிய ரீதியில் இலங்கை முன்னணி நாடாக அங்கீகரிப்பு – ஐக்கிய நாடுகள் சபை..!

0
72

ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் பேரவையின் ஆறாவது அமர்வில் (UNEP), சதுப்பு நிலங்களை மறுசீரமைப்பதில் உலகளாவிய ரீதியில் இலங்கை முன்னணி நாடாக அங்கீகரிக்கப்பட்டது.

கென்யாவின் நைரோப் நகரில் அமைந்திருக்கும் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் வேலைத் திட்டத்தின் (UNEP) தலைமையகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜயவர்தன கலந்துகொண்டார். இதன்போது இலங்கைக்கான விருதை சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜாசிங்க பெற்றுக் கொண்டார்.

காலநிலை மாற்றம், உயிரியல் பல்வகைத்தன்மை இழப்பு மற்றும் சுற்றாடல் மாசு ஆகிய மூன்று நெருக்கடிகளுக்கும் தீர்வு காண்பதற்கான உலகளாவிய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் அமைப்பின் ஆறாவது அமர்வு நடைபெற்றது.

அமர்வை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் முகமாக நிரந்தரப் பிரதிநிதிகளின் திறந்த குழு கூட்டம் நடைபெற்றிருந்த நிலையில், இதன்போது சதுப்புநில மறுசீரமைப்பு முயற்சிகளில் இலங்கையை உலகளாவிய முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்பட்டது.

எதிர்கால சந்ததிக்காக நிலையான அபிவிருத்தி இலக்குகளை முன்னோக்கி கொண்டுச் செல்வது தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் மாநாட்டின் ஆறாவது அமர்வு, உலகளாவிய சுற்றுச்சூழல் தொடர்பில் முடிவெடுப்பதில் முன்னணியில் உள்ளதோடு மனித குலத்திற்கும் இயற்கைக்கும் இடையே ஒரு புதிய உறவை உருவாக்குவதற்கும் பங்களிக்கிறது.

சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்காக அர்ப்பணிக்கும் ஒரே உலகளாவிய உறுப்பினர் மன்றமாக, ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் பேரவையானது, சுற்றுச்சூழல் தொடர்பிலான கூட்டுப் பொறுப்பை நோக்கமாகக் கொண்ட முக்கியமான முன்முயற்சிகள் மற்றும் புத்தாக்க செயற்பாடுகளுக்கான தனித்துவமான களமாகவும் விளங்குகிறது.

அரச நிறுவனங்கள், சிவில் அமைப்புக்கள், ஆய்வாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பங்குபற்றுதலுடன் நடைபெறும் இந்த மாநாடு சுற்றாடல் கொள்கை வகுப்பிற்கும் களம் அமைத்துக் கொடுக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here