ரஷ்யாவில் இடம்பெற்ற தாக்குதலில் இதுவரை 133 பேர் மரணம்.!

0
62

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் இசை நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கி சூட்டில் இதுவரை 133 பேர் பலியாகியுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொஸ்கோவில் உள்ள கிராஸ்னோகோர்ஸ்கில் உள்ள கிரோகஸ் சிட்டி என்ற வணிக வளாகத்தில் இசை கச்சேரி நடக்கும் அரங்கு உள்ளது.

இது சுமார் 6000 பேர் வந்து செல்லும் அளவுக்கு மிகப்பெரியதாகும். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த பகுதி வழக்கம் போல் பொதுமக்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

அப்போது துப்பாக்கியுடன் வந்த மர்மநபர்கள் அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார்கள். இதனால் அங்கு திரண்டு இருந்த மக்கள் அலறி கூச்சலிட்டபடி சிதறி ஓடினார்கள். துப்பாக்கி சூட்டில் மொத்தம் 133 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும் பலர் காயமடைந்துள்ளனர். தகவல் அறிந்த பொலிஸார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். துப்பாக்கி சூடு காரணமாக அங்கு பல இடங்களில் தீப்பற்றி எரிந்தது.

தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனிடையே அங்கிருந்த திரையரங்கின் மேற்கூரை நேற்று காலை இடிந்து விழுந்தது. துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தீவிரவாத தாக்குதலாக இருக்கக்கூடும் என்று சந்தேகம் எழுந்தது. இதனிடையே தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 11 பேரை ரஷ்ய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதில் 4 பேர் நேரடியாக தாக்குதலில் ஈடுபட்டவர்கள். இவர்கள் ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பகுதியில் உக்ரைன் எல்லை அருகே கைது செய்யப்பட்டதாக விசாரணை குழு தெரிவித்துள்ளது.

அவர்கள் உக்ரைனின் எல்லையை கடக்க திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

எனினும் இதன் நம்பக தன்மையை உறுதி செய்ய முடியவில்லை. இதனிடையே இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தான் பொறுப்பு என்று அமெரிக்க புலனாய்வு அமைப்புகளும் உறுதி செய்துள்ளன.

எனினும் தாக்குதல் சம்பவத்துக்கும் உக்ரைனுக்கும் தொடர்புள்ளதாக ரஷ்யாவின் விசாரணை முகவரகங்கள் சந்தேகத்தை எழுப்பியுள்ளன. எனினும் இந்த தாக்குதலுக்கும் தமக்கும் எந்தவித தொடர்புகளும் இல்லை என உக்ரைன் மறுத்துள்ளது.

ரஷ்ய ஜனாதிபதியாக விளாடிமிர் புட்டின் மீண்டும் பொறுப்பேற்றுள்ள நிலையில் இதுபோன்ற தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கூறுகையில், துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானவர்களுக்கு நாடு முழுவதும் இன்று துக்கம் தினம் அனுசரிக்கப்படும்.

இந்த தாக்குதல் ரஷ்யாவில் நடந்த மிக மோசமான தாக்குதலாகும். நாடு முழுவதும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here