யாழ் நல்லூர் துப்பாக்கிச் சூடு சம்பவம் – நீதிபதி இளஞ்செழியன் பரபரப்பு வாக்குமூலம்.!

0
136

நல்லூர் ஆலய சூழல் துப்பாக்கி சூடு நடாத்தி விளையாடும் திடல் இல்லை என வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தனது சாட்சியத்தின் போது குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி டெனிஸ் சாந்தன் சூசைதாஸன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

அதன் போது, நேற்றைய தினம் புதன்கிழமை நீதிபதி இளஞ்செழியன் மன்றில் தோன்றி, தனது சாட்சியங்களை பதிவு செய்தார்.

சம்பவ தினத்தன்று மேல் நீதிமன்றில் இருந்து எனது காரில் யாழ். – கண்டி வீதி வழியாக சென்று, கோவில் வீதி வழியாக எனது உத்தியோகபூர்வ இல்லத்தை நோக்கி பயணித்தேன்.

காரினை எனது சாரதி ஓட்டினார். அவருக்கு அருகில் எனது ஒரு மெய்ப்பாதுகாவலர் அமர்ந்திருந்தார். நான் காரின் பின் இருக்கையில் அமர்ந்து இருந்தேன்.

எனது கார் சாரதியின் மோட்டார் சைக்கிளை எனது மற்றுமொரு மெய்ப்பாதுகாவலர் செலுத்தி வந்தார்.

நல்லூர் ஆலய பின் வீதியில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டமையால், மோட்டார் சைக்கிளில் முன்னே சென்ற எனது மெய்ப்பாதுகாவலர் வீதியின் போக்குவரத்தினை சீர் செய்து எனது காரினை சந்தியால் பருத்தித்துறை வீதி பக்கம் அனுப்பினார்.

அவ்வேளை காரின் பின் புறமாக இருந்த நான் காரின் கண்ணாடி வழியாக பின் புறம் அவதானித்த போது, சிவில் உடை தரித்த நபர் ஒருவர் வீதியில் போக்குவரத்தினை சீர் செய்து கொண்டிருந்த எனது மெய்ப்பாதுகாவலரின் இடுப்பு பட்டியில் இருந்த துப்பாக்கியை பறிக்க முற்பட்டார்.

அதனை அவதானித்து காரினை நிறுத்துமாறு சத்தமிட்டேன். மெய்ப்பாதுகாவலர் சிவில் உடை தரித்தவரிடம் இருந்து தனது துப்பாக்கியை பறிக்க மல்லுக்கட்டினார்.,

நான் காரினை விட்டு இறங்கி துப்பாக்கியை கீழே போடுமாறு கத்தினேன். எனக்கும் அவர்களுக்கும் இடையில் 12 – 15 அடி இடைவெளி இருந்தது. துப்பாக்கியை பறித்தவர் துப்பாக்கியை லோர்ட் செய்தார். சிறிது நேரத்தில் ” மகே அம்மே ” என கத்தியவாறு எனது மெய்ப்பாதுகாவலர் வயிற்றை பிடித்தவாறு சரிந்து விழுந்தார்.

அடுத்து துப்பாக்கியுடன் நின்றவர் என்னை நோக்கி சுட்டார் உடனே என்னுடன் காரில் பயணித்த மற்றைய மெய்ப்பாதுகாவலர், என்னை காரின் இடது புறம் தள்ளி விட்டு கீழே படுத்துக்கொண்டார்.அவ்வேளை அவரது இடது தோள் புறத்தில் துப்பாக்கி சூடு பட்டது. பதிலுக்கு எனது மெய்ப்பாதுகாவலர் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இருவரது துப்பாக்கி ரவைகளை தீர்ந்த நிலையில், சிவில் உடை தரித்தவர் எனது காரின் எதிர்புறமாக பருத்தித்துறை வீதி வழியாக ஓடி தப்பினார்.

துப்பாக்கி சூடு நடத்தியவரை சுமார் 12 நிமிடங்கள் நேரில் பார்த்தேன் என்பதால், எதிரி கூண்டில் நிற்கும் எதிரி தான் துப்பாக்கி சூட்டினை நடாத்தினார் என நன்கு தெரியும் என கூறினார்.

குறுக்கு விசாரணையின் போது, எதிரியின் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி, ” முச்சக்கர வண்டி சாரதிக்கு இடையிலான முரண்பாட்டின் போது, உங்கள் மெய்ப்பாதுகாவலர் தலையீடு செய்தமையால், ஏற்பட்ட முரணாலையே துப்பாக்கி சூடு இடம்பெற்றது, உங்களை கொல்லவேண்டும் என்ற நோக்கம் இருக்கவில்லை” என குறிப்பிட்டதை, நீதிபதி மறுதலித்து ” நல்லூர் ஆலய சூழல் சுட்டு விளையாடும் திடல் அல்ல என தெரிவித்தார்.

நீதிபதியின் சாட்சியம் நிறைவுற்றதை அடுத்து , நீதிபதி பலத்த பாதுகாப்புடன், நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறினார்.

அதேவேளை, சம்பவ தினத்தன்று, நீதிபதியின் மற்றுமொரு மெய்ப்பாதுகாவலராக கடமைக்கு சென்று, துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகஸ்தர் தனது சாட்சியத்தின் போது, துப்பாக்கி சூட்டில் எனது நண்பர் படுகாயமடைந்த நிலையில், நான் எனது நண்பரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமே எனக்கு இருந்தது. அதனால் சூழலை என்னால் முழுமையாக அவதானிக்க முடியவில்லை. என கண்ணீருடன் தனது சாட்சியத்தை பதிவு செய்தார்.

குறித்த வழக்கு விசாரணைகள் நாளைய தினம் வெள்ளிக்கிழமை வரை தொடர்ச்சியாக மூன்று தினங்கள் யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெறவுள்ளது.

வழக்கின் பின்னணி.

கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் திகதி யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் இருந்து, நல்லூர், சங்கிலியன் வீதியில் உள்ள தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு காரில் பயணித்துக்கொண்டிருந்த வேளை, நல்லூர் ஆலய தெற்கு வாசல் கோபுரத்திற்கு அருகில் இருவர் போக்குவரத்திற்கு இடையூறாக செயற்பட்டனர்.

அதனை அடுத்து நீதிபதியின் மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் சார்ஜெண்ட் அவர்களை அப்புறப்படுத்த முயன்ற போது, மோதலில் ஈடுபட்டிருந்த நபர்களில் ஒருவர் பொலிஸ் உத்தியோகஸ்தரின் உத்தியோகபூர்வ துப்பாக்கியை பறித்து பொலிஸ் உத்தியோகஸ்தரை சுட்டதுடன் நீதிபதியின் காரினையும் நோக்கி சுட்டிருந்தார்.

துப்பாக்கி சூட்டில் பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழந்ததுடன், மற்றைய பொலிஸ் உத்தியோகஸ்தர் படுகாயமடைந்திருந்தார். நீதிபதி தெய்வாதீனமாக காயங்கள் இன்றி உயிர் தப்பி இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here