நிரந்தர சிரிப்புடன் ஆஸ்திரேலியாவில் பிறந்த பெண் குழந்தை; மிக மிக அபூர்வமான நோயாம்..!

0
316

கார்பெரா: ஆஸ்திரேலியாவில் பிறந்த பெண் குழந்தை நிரந்தரமாக சிரிப்பதை போன்ற முக அமைப்பை கொண்டுள்ளது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ப்ளேஜ் முச்சா (வயது 20), க்ரிஸ்டினா வெர்சர் (வயது 21) தம்பதிக்கு கடந்த டிசம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்தவுடன் பெற்றோர், மருத்துவர்கள், உறவினர்கள் அனைவருக்கும் ஒரே ஆச்சரியம். ஆம், குழந்தையின் வாய் பெரிதாக இருப்பதை போல் இரு கன்னங்களிலும் குழி இருந்திருக்கிறது.

இதன் காரணமாக அந்த குழந்தை சிரித்த முகத்துடனே இருப்பதை போன்ற தோற்றம் உள்ளது. இந்த குழந்தைக்கு அய்லா என பெயர் சூட்டிய பெற்றோர் குழந்தையை புகைப்படம் எடுத்து சமுக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

சிரித்த முகத்துடன் காட்சியளித்த இந்த அழகிய பெண் குழந்தையின் படத்தை பார்த்து ரசித்து பகிர்ந்து வருகின்றனர்.

இதுகுறித்து குழந்தை அய்லாவின் பெற்றோர் தெரிவிக்கையில்- வாயை ஒட்டி இரு குழிகள் இருப்பதால் அய்லா எப்போது சிரித்த முகத்தோடு இருப்பதாக தெரிகிறது.

இதனால் குழந்தை பார்ப்பதற்கு கூடுதல் அழகாக இருக்கிறது. பலருக்கும் குழந்தையை பிடித்துள்ளது.

நாங்கள் வெளியிட்ட புகைப்படங்களை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அதே வேளையில் கன்னத்தில் உள்ள இந்த குழிகளால் அய்லாவால் மற்றவர்கள்போல் இயல்பாக இருக்க முடியவில்லை. அய்லாவுக்கு சரிவர பாலூட்டவும் முடியவில்லை.

எதிர்காலத்தில் அவரது உணர்வுகளை சரிவர வெளிப்படுத்த முடியாது என்று நினைக்கிறேன்.

எனவே அறுவை சிகிச்சை செய்யலாம் என முடிவு செய்து மருத்துவர்களை அணுகியுள்ளோம்.

அய்லாவுக்கு ஏற்பட்டுள்ளது “பைலேட்டரல் மேக்ரோஸ்டோமியா” என்ற நோய் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான அறிக்கையின்படி இந்த குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 7 பேர் மட்டுமே தற்போது இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

அய்லா பிறந்த மருத்துவமனையில் இதுபோன்ற குறைபாடு உடைய குழந்தை பிறப்பது இதுவே முதல் முறையாம். பெரும்பாலும் இந்த குறைபாடும் ஆண் குழந்தைகளுக்கே ஏற்படும் என்றும், வலது பக்கம் மட்டும் பல குழந்தைகளுக்கு இது வரும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

சுமார் 3 லட்சம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும் என கூறப்படுகிறது. இதுகுறித்த அனுபவம் மருத்துவர்களுக்கு இல்லாததால் சிகிச்சையில் பல்வேறு சிரமங்களை அனுபவிப்பதாக குழந்தையின் தாய் வெர்சர் தெரிவித்துள்ளார்.

குழந்தை வயிற்றில் இருக்கும்போது இதுபோன்ற பிரச்சனை இருப்பதை மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here