இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான தகவல்.!

0
151

இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் கோரி விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் விமான நிலையத்திலிருந்து வெளியில் வரும்போதே சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுமென போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்..

குடிவரவுத் திணைக்களம், விமானப் போக்குவரத்து சேவைகள் அதிகார சபை மற்றும் சுற்றுலா அமைச்சு ஆகியன இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் விமான நிலையத்தில் விண்ணப்பிப்பதற்கும் சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கும் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது என்றார்.

இதன்படி, மாதமொன்றுக்கான சாரதி அனுமதி பத்திரங்களுக்கு 25 டொலர்களும், மூன்று மாதங்களுக்கான சாரதி அனுமதி பத்திரங்களுக்கு 50 டொலர்களும், 6 மாதங்களுக்கு 75 டொலர்களும், ஒரு வருடத்திற்கு மேலான அனுமதி பத்திரங்களுக்கு 200 டொலர்களும் அறவிடப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வீதி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்ற நடவடிக்கைகளின்றி உடனடியாக இழப்பீடு வழங்கும் வேலைத்திட்டமும் மார்ச் 01 ஆம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதென இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, விபத்து இடம்பெற்று ஒரு வருடத்திற்குள் சம்பந்தப்பட்ட காப்புறுதி நிறுவனத்திற்கு விண்ணப்பிப்பதன் மூலம் 5 இலட்சம் ரூபா வரையான இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்ள முடிவதோடு, அந்த தொகையை நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள காப்புறுதி நிறுவனத்தின் எந்தவொரு கிளையிலும் பெற்றுக் கொள்ள கூடிய வசதிகள் வழங்கப்படும் எனவும் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய வீதி விபத்துக்களை மட்டுப்படுத்தும் வகையிலான பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. வீதி விபத்துக்களால் பாதிக்கப்படுபவர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் அறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கும் காப்புறுதி நிறுவனங்களுக்கும் இடையில் இடம்பெற்ற தொடர் கலந்துரையாடலின் பலனாக நீதிமன்ற நடவடிக்கையின்றி விரைவாக இழப்பீடு வழங்கும் வேலைத் திட்டம் மார்ச் 1 ஆம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது.

மார்ச் 1 ஆம் திகதிக்கு பின்னரான விபத்துக்கள் தொடர்பில் மாத்திரமே இத்திட்டம் செயற்படுத்தப்படும். இந்த நடவடிக்கை குறித்து காவல்துறையினர் மற்றும் பிரதேச செயலாளர்களால் கிராம சேவை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது“ என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here