முல்லைத்தீவு – ஒட்டுசுட்டானில் 300 அடி ஆழ பாரிய குழாய்க் கிணறு.. மக்கள் எதிர்ப்பு.!

0
165

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் ஒட்டுசுட்டான் தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் அலுவலக காணிக்குள் 300 அடி ஆழம் கொண்ட குழாய் கிணறு தோண்டப்படுவதால் அருகில் உள்ள விவசாயிகளின் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் என தெரிவித்து விவசாயிகள் மக்கள் இணைந்து இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்கள்.

ஒட்டுசுட்டான், சிவநகர் ,காதலியார் சமணங்குளம்,போன்ற கிராமங்களில் வசிக்கும் குடும்பங்கள் விவசாயத்தினை நம்பி வாழ்ந்து வருகின்றார்கள் இந்த மக்கள் நிலக்கடலை,மிளகாய்,பப்பாசி போன்ற தோட்டங்களை அவர்களின் கிணற்று நீரினை பயன்படுத்தி செய்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் ஒட்டுசுட்டான் பிரதேச குடிநீர் திட்டத்திற்காக நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபை ஒட்டுசுட்டான் நீர்ழங்கல் விநியோகத்திட்ட அலுவலக காணிக்குள் அனுமதியற்ற முறையில் 300அடி ஆழத்தில் நிலத்தடி நீரினை உறுஞ்சி ஏனைய பிரதேச மக்களுக்கு வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

ஒட்டுசுட்டான் நீர்வழங்கல் விநியோகத்திட்ட அலுவலகம் அமைக்கும் போது பேராற்றில் இருந்து நீரினை கொண்டுவந்து சுத்திகரித்து மக்களுக்கு வழங்குவதாக அறிவித்தே நீர்வழங்கல் திட்டத்தினை மக்களுக்கு அறிமுகம் செய்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்த நிலையில் அலுவலகம் அமைந்த காணிக்குள் 300 அடி அழம் கொண்ட நிலத்தடி நீரினை உறுஞ்சும் குழாய் கிணறுஅமைக்கும் பணிகள் அண்மை நாட்களாக நடைபெற்று வந்ததை அறிந்த கிராம மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (26) ஒன்று கூடியபோது அங்கு கிராம சேவையாளர் மற்றும் பொலீசார் வருகைதந்து மக்களின் பிரச்சினையினை கேட்டறிந்து கொண்டுள்ளார்கள்.

எவரின் அனுமதியும் இன்றி நிலத்தடி நீரினை உறுஞ்சும் இந்த செயற்பாட்டிற்கு அருகில் உள்ள கிராம மக்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியதுடன் இந்த குழாய் கிணறு அமைக்கு நடவடிக்கையினை கைவிடவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்கள்.

பொலிஸாரின் பிரசன்னத்துடன் குழாய் கிணறு அமைக்கும் இயந்திரம் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதுடன் இதுதொடர்பில் அரச மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியபின்னர் முடிவிற்கு வருவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here