AI தொழில்நுட்பம் மூலம் மோசடி; மகன்/மகள் பேசுவதுபோல் பெற்றோரிடம் பேசி பணம் கறந்த கும்பல்.!

0
154

டிஜிட்டல் துறையில் ஏ.ஐ. தொழில் நுட்பம் புதிய புரட்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. அதே நேரம் மோசடி பேர்வழிகளும் இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மோசடி செய்யும் வேலையில் இறங்கி இருக்கின்றனர்.

மும்பையை ரஞ்சித் என்பவரின் நம்பருக்கு மர்ம நம்பரில் இருந்து வாட்ஸ் ஆப் மூலம் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தன்னை சி.பி.ஐ.அதிகாரி என்று அறிமுகம் செய்து கொண்டு, `உங்களது மகனை பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்து வைத்திருக்கிறோம். வழக்கு பதிவு செய்ய இருக்கிறோம். அப்படி செய்யாமல் இருக்க ரூ.50 ஆயிரம் அனுப்பு வேண்டும்” என மர்ம நபர் கேட்டுக்கொண்டார்.

மேலும், `நம்பிக்கை இல்லை எனில் வேண்டுமானால் உங்களது மகனிடம் பேசுங்கள்’ என்று கூறி போனை கொடுத்தார். போனில் பேசிய நபர், அழுதுகொண்டே பேசினார். அது ரஞ்சித் மகனா என்பதைக்கூட சரியாக அடையாளம் காண முடியவில்லை. ஆனால் அன்று ரஞ்சித் மகன் உண்மையில் கல்லூரிக்கு சென்று இருந்தார்.

அழுகை சத்தத்தை கேட்டவுடன் பயத்தில் மர்ம நபர் சொன்ன வங்கிக் கணக்கிற்கு ரூ.50 ஆயிரம் அனுப்பி வைத்தார். இது குறித்து ரஞ்சித் கூறுகையில், “நான் 50 ஆயிரம் அனுப்பியவுடன் எனது போனை 15 நிமிடம் ஹோல்டில் வைத்திருந்தனர். பின்னர் பேசிய மர்ம நபர் அலுவலத்தில் மீடியா பிரமுகர்கள் நிற்கிறார்கள் என்றும், அவர்கள் ஒரு லட்சம் கேட்பதாக சொன்னார். ஆனால் என்னிடம் அந்த அளவுக்கு பணம் இல்லை என்று தெரிவித்தேன். ஆனாலும் போராடி ரூ.50 ஆயிரம் அனுப்பி வைத்தேன். அதன் பிறகு எனது மகனிடம் போனில் பேச கொடுத்தார்கள். போனில் பேசிய நபர் எனது மகன் போன்று பேசினார்” என்றார்.

ஆனால் போனில் பேசிய நபர் மேலும் ரூ.2.50 லட்சம் கேட்டார். அதற்குள் ரஞ்சித் மனைவி கல்லூரிக்கு போன் செய்து தங்களது மகன் கல்லூரியில் இருப்பதை உறுதி செய்து தனது கணவரிடம் தெரிவித்தார்.

உடனே போனை கட் செய்துவிட்டு ரஞ்சித் இது குறித்து போலீஸில் புகார் செய்தார். போனில் பேசிய நபர் ஏ.ஐ. தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ரஞ்சித் மகன் போன்று பேசி இருப்பது தெரிய வந்தது. இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதே போன்று மற்றொரு சம்பவமாக, நேகா என்ற பெண்ணுக்கு வாட்ஸ்ஆப் காலில் ஒரு அழைப்பு வந்தது. போனில் பேசிய நபர் நேகாவின் மகன் பெயரை சொல்லி உங்களுக்கு அவர் என்ன முறை என்று கேட்டார். ஆனால் போன் பாகிஸ்தான் கோடில் இருந்து வந்திருந்தது. அதிலிருந்தே நேகா சுதாரித்துக்கொண்டார். நேகா போனில் பேசிய நபரிடம் நீங்கள் யார் என்று கேட்டார். உடனே அந்த நபர் தான் சி.பி.ஐ அதிகாரி என்று தெரிவித்தார். அதோடு உங்களது மகனை பாலியல் வழக்கில் பிடித்து வைத்திருப்பதாக தெரிவித்தார். உடனே நீங்கள் பிடித்து வைத்திருக்கும் நபர் எனது உறவினர் என்றும், அவரை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் என்றும், அவருக்கு பர்கர், சாண்ட்விச் மற்றும் உணவுப்பொருட்கள் வாங்கிக்கொடுக்கும்படி நேகா தெரிவித்தார்.

இதனால் டென்சனாக மர்ம நபர் போனை கட் செய்துவிட்டு சென்றுவிட்டார். மும்பையில் உள்ள பிரபல வங்கி ஒன்றில் பணியாற்றும் வாலிபர் ஒருவரின் பெற்றோருக்கும் இதே போன்று வாட்ஸ் ஆப் கால் வந்தது. அதில் பேசிய நபர் உங்களது மகனை பாலியல் புகாரில் பிடித்து வைத்திருக்கிறோம் என்று தெரிவித்தார். உடனே வாலிபரின் தந்தை உயர் அதிகாரியிடம் போனை கொடுக்க சொன்னார். அருகில் இருந்த வாலிபரின் தாயார் தனது மகனுக்கு போன் செய்து அவர் வங்கியில் இருப்பதை உறுதி செய்தார்.

அதற்குள் மர்ம நபர் போனை வைத்துவிட்டார். போனில் பேசுபவர்கள் சரியாக ஒரு குறிப்பிட்ட பெயரை சொல்லி பெற்றோருக்கு போன் செய்கின்றனர். எனவே பொதுமக்கள் வாட்ஸ் ஆப் கால்கள் விவகாரத்தில் எச்சரிக்கையாக இருக்கும்படி போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here